Published : 10 Jul 2020 09:23 PM
Last Updated : 10 Jul 2020 09:23 PM

வெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலிகள் எவை? - விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தகவல் 

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

சீனாவின் மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலிகள் குறித்து விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, புள்ளி விவரப்பாதுகாப்பு மற்றும் தனி நபர் ரகசியங்களை மீறுவதாக அமையக்கூடாது.

எனினும், சில நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய நிறுவனங்கள் சில செல்போன் செயலிகள் வாயிலாக, அவற்றை பயன்படுத்துவோரின் விவரங்களை சட்ட விரோதமாக திருடுவதுடன், அவற்றை வேறு சிலருக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இதுபோன்ற புள்ளிவிவரத் தொகுப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடும்.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லையில் சீன அத்துமீறல்கள் நடந்து வரும் வேளையில், இந்தியாவில் சீனச் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அண்மைக்காலத்தில் மளிகைப்பொருள்கள் கொள்முதல் (பிக் பேஸ்கட்), உணவு விநியோகம் (சொமாட்டோ மற்றும் ஸ்விகி), பயண டிக்கெட் முன்பதிவு ( மேக் மை ட்ரிப்) போன்ற சீனச் செயலிகள் இந்தியாவில் மிக ஆழமாகக் காலூன்றி உள்ளன.

மின்னணு வர்த்தகம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்றவற்றிலும் சீனச் செயலிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது.

சீனாவால் அல்லது அந்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இத்தகைய செயலிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றன.

சீனாவின் இந்தச் செயலிகளை இந்திய மக்கள் பெருமளவுக்கு சார்ந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

இந்நிலையில், நாட்டின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிந்ததையடுத்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த அழைப்பு சர்வதேச அளவிற்குச் சென்றிருப்பதுடன், பிற நாடுகளிலும் டிக் டாக் போன்ற சீனச் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுபோன்ற செயலிகள் மூலம் சீன அரசு, அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பல லட்சக்கணக்கானோரை உளவு பார்த்து வருகிறது.

பிறரைத் தொடர்பு கொள்வதற்கு வாட்ஸ் அப் எனப்படும் அமெரிக்க செயலியையும், வீடியோகால் மூலம் பேசுவதற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சீன நாட்டவரால் நடத்தப்படும் ஜும் செயலியையும் பயன்படுத்தி வருகிறது.

சீனாவின் 59 செயலிகளைத் தடை செய்வதற்குக் கூட இந்திய அரசு கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற வெளிநாட்டுச் அமைப்புகளைத் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, இவற்றுக்கு மாற்றாக மிகவும் பயனுள்ள வெளிப்படையான, செயல்பாடு மிகுந்த மற்றும் பாதுகாப்பாக செயலிகளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டயமாகியுள்ளது.

இதுபோன்ற இந்தியச் செயலிகளைப் பயன்படுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக, டிக் டாக், இன்ஸ்ட்ராகிராம், யூ டியூப் செயலிகளுக்கு பதிலாக இந்தியாவின் மித்ரன் (Mitron) மற்றும் சிங்காரி (Chingari) செயலிகளையும், ஷேரிட்டுக்கு பதிலாக ஜியோ ஸ்விச், Baidu Map மற்றும் கூகுள் மேப்பிற்கு பதிலாக மை மேப் இந்தியா மூவ், விளையாட்டுக்கான பப்ஜி, கிளாஸ் ஆப் கிங்ஸ் போன்றவற்றுக்கு பதிலாக லூடோ கிங், சுடோகு கிங் போன்ற செயலிகளும், வர்த்தகத்திற்கான பிளிப் கார்ட், ஸ்னாப் டீல், அமேசான் போன்றவற்றுக்கு பதிலாக Tata Cliq, Reliance Digital / Jio Mart போன்ற இந்தியச் செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதே போன்று, தடை செய்யப்பட்ட 59 சீனச் செயலிகளில் 54 செயலிகளுக்கு மாற்றாக இந்தியச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்திக்கு புத்துயிர் ஊட்டவும், தற்சார்பு நிலையை எட்டவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது போன்ற முயற்சிகள், நாட்டின் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு கர்நாடகாவில் உள்ள பெலகாவி விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் கரிசித்தப்பா குழுவினர் மற்றும் துணை வேந்தர் அடங்கிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x