Published : 07 Jul 2020 09:13 PM
Last Updated : 07 Jul 2020 09:13 PM

கரோனா நோய்த் தொற்று பரவல் சூழல்; உலக வங்கியுடன் 15-வது நிதிக்குழு ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையில், இந்திய அரசுக்கு உலக வங்கி ஒரு பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் வழங்கியுள்ளது.

இந்தியாவின் சுகாதாரத் துறைக்கான செலவிடுதலுக்கு மறுமுன்னுரிமை ஏற்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தேவை மற்றும் எண்ணத்தைக் கருத்தில் கொண்டும், உலக வங்கி, நிதி ஆயோக் பிரதிநிதிகள் மற்றும் நிதிக் குழுவின் சுகாதாரத் துறைக்கான உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆகியோருடன் 15வது நிதிக் குழு விரிவான ஆலோசனை நடத்தியது.

15வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிதிக் குழுவின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலக வங்கி சார்பில் அதன் இந்தியப் பிரிவுக்கான இயக்குநர் டாக்டர் .ஜுனைத் அஹமத், உலக அளவிலான இயக்குநர் முகமது அலி பாட்டே மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தவிர எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர். ரண்தீப் குலேரியா, நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பவுல், ஆயுஷ்மான் பாரத் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி டாக்டர். இந்து பூஷண் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்திய சுகாதாரத் துறையில் நீண்ட காலமாகவே உலக வங்கி ஈடுபாடு கொண்டுள்ளது என்று தொடக்கத்தில் டாக்டர் ஜுனைத் அஹமது தெரிவித்தார். அண்மையில், நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையில், இந்திய அரசுக்கு உலக வங்கி ஒரு பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனைகள் மூலமாக சேவைகள் அளிப்பதை பலப்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு உலக வங்கி ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எச்.ஐ.வி. துறையில் இந்திய அரசுடன் 20 ஆண்டு கால நீண்ட பங்களிப்பை அண்மையில் உலக வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்தது. சுகாதாரத் திட்டங்களை அமல் செய்வதில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் முக்கியமான பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். மாநிலங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட அம்சங்கள் கொண்டவையாக இருப்பதால், சுகாதாரத் தேவைகளுக்கான தீர்வுகள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப

உருவாக்கப்பட்டவையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். சுகாதார வசதி என்பது வெறும் சமூகச் செலவினமாக மட்டும் அல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமான அம்சமாக உள்ளது என்று ஜுனைத் அஹமது கூறினார்.

இந்த விஷயத்தில் மூன்று வெவ்வேறு வழிகளில் சுகாதாரத் துறையை நிதிக்குழு ஆய்வு செய்யலாம் என்றார் அவர். ஒரு நபருக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற அளவை அதிகரிக்க மானியங்கள் அளித்தல், திறன் வளர்ப்புக்கு மானியம், சில சுகாதாரப் பலன்களுக்கு செயல்திறனுடன் கூடிய ஊக்கம் அளித்தல் என அணுகலாம் என்றார் அவர். அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார்.

இந்தியாவில் சுகாதாரத் தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு தனியார் துறை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தனியார் துறையுடன் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக, பயனாளிகளுக்கு நேரடியாக உதவிகளை அளிக்கும் திட்டத்தின் (டி.பி.டி.) மூலம் தனியார் கிளினிக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x