Published : 06 Jul 2020 06:48 AM
Last Updated : 06 Jul 2020 06:48 AM

2 கட்ட கரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.33,800 கோடி அளவுக்கு பணியாளர்களுக்கு ஊதிய இழப்பு: ஐஜிஐடிஆர் ஆய்வறிக்கை தகவல்

மும்பை

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14வரை முதல் கட்ட ஊரடங்கும் பின்னர் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே3-ம் தேதி வரை 2-ம் கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய இழப்பு ரூ.33,800கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி மேம்பாட்டு ஆய்வு மையம் (ஐஜிஐடிஆர்) நடத்திய ஆய்வு முடிவுகள் இத்தகவலைத் தெரிவிக்கின்றன.

‘‘இந்தியாவில் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பணியாளர்கள் கிடைப்பது மற்றும் அவர்களால் ஏற்படும் பாதிப்பு’’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த2017-18-ம் ஆண்டில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய அளவை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு விவரம் வருமாறு:

முதல் கட்ட ஊரடங்கில் 11.6கோடி பேருக்கும், 2-ம் கட்டத்தில்7.9 கோடி பேருக்கும் பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இவர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்த பணியாளர்கள் ஒருவேளை 6 மாதங்கள் வேலையின்றிஇருப்பதாக கணக்கில் கொண்டால், அதனால் ஏற்படும் ஊதிய இழப்பு ரூ.2 லட்சம் கோடியாக இருக்கும்.

இரண்டு கட்ட ஊரடங்கின் போது எந்த மாநிலங்களில் அதிகஅளவில் வைரஸ் பாதிப்பு இருந்ததோ அந்த மாநிலத்தில் அதிக அளவிலான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பணியிழந்த ஊழியர்களில் 40 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 70 சதவீதம் பேர் பணியாளர்களே.

கிராமப்பகுதிகளில் வேலைஇழந்தவர்களை விட நகர்ப்பகுதிகளில் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x