Published : 11 Sep 2015 10:18 AM
Last Updated : 11 Sep 2015 10:18 AM

தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூருக்கு இணையாக சென்னை வளர்ச்சி: நாஸ்காம் தலைவர் சந்திரசேகரன் தகவல்

தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூருக்கு நிகராக சென்னை வளர்ந்திருக்கிறது என்று நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகரன் கூறினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் கருத்தரங்கை வழிநடத்தினார். இதில், நாஸ்காம் அமைப்பின் தலைவரும், காக்னிசென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவருமான ஆர்.சந்திரசேகரன் பேசும்போது கூறியதாவது;

இன்றைய இளைஞர்கள் புதுமையாக ஏதாவது செய்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் மயம் எனப்படும் தகவல் தொழில்நுட்பமயமானது எண்ணற்ற வேலைவாய்ப்பு களையும் முதலீட்டு வாய்ப்பு களையும் உருவாக்கி இருக்கிறது.

1.7 மில்லியன் டாலரில் ஆரம்பிக்கப்பட்ட காக்னிசென்ட் நிறுவனம் இன்றைய தினம் 12 பில்லியன் டாலர் வர்த்தகம் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. காக்னிசென்ட் சார்பில் சிறு பயன்பாட்டு செயலிகள் உருவாக்கும் 10 ஆயிரம் மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தோம். இதுவரை யில் 5 ஆயிரம் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் 10 சதவீதம் தமிழகத்தில் தொடங்கப்பட் டுள்ளன. தகவல் தொழில்நுட்ப வசதிகளை புதுப்புது துறைகளில் பயன்படுத்திக்கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. தற்போது கார்களில் 40 சதவீதம் அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருக்கிறது.

பொதுவாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நகரம் என்றாலே பெங்களூருதான் முதலிடத்தில் இருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பெங்களூரு எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு சென்னையும் வளர்ந்திருக்கிறது.

காக்னிசென்ட், டிசிஎஸ், ஹெச்சிஎல் உள்பட முன்னணி 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையங்கள் சென்னையில்தான் செயல்படுகின்றன. மென்பொருள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி ஆட்டோ உதிரி சாதனங்கள் தயாரிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று சந்திரசேகரன் குறிப்பிட்டார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x