

இந்தியாவில் மோட்டார் பம்ப் செட் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் மோட்டார் பம்பு செட்ட விற்பனை ரூ.16ஆயிரம் கோடியாக இருந்தது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயம், குடிநீர், வீட்டு உபயோகம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பம்புசெட்டுகள் பெருமளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளன. சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுகள், மத்திய, மாநில அரசுகளின் 'குசும்' (KUSUM) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால், 75 சதவீதம் மட்டும் குறைந்துள்ளது.
எனினும், தற்போதைய பம்ப் செட் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்குத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்குச் சென்று விட்டதால், கடும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மற்ற மாவட்டங்களுக்குச் சென்று பணிபுரிய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் தேவையான பரிசோதனைகளை செய்து, தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கலாம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.