

வருமான வரித் துறை 2019-20நிதி ஆண்டுக்கான வரிக் கணக்குதாக்கலில் வரி சேமிப்பு முதலீடுகளைக் குறிப்பிடுவதற்கான கால அளவை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இதன்மூலம் வரி செலுத்துவோர் ஜூலை 31 வரை வரி சேமிப்புதிட்டங்களை மேற்கொள்ளலாம்.
கரோனா வைரஸ் பாதிப்பால் எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் தொழில்கள், வர்த்தகம் பாதித்து மக்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வருமான வரி துறை, வரிச் செலுத்துவோருக்கு வரி சேமிப்பு திட்டங்களை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ளது.
2019-20 நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது வரி சேமிப்பு முதலீடுகளைக் குறிப்பிட்டு வரி விலக்கு சலுகை பெறுவதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது வருமான வரி துறை. 2019-20 நிதி ஆண்டுக்கான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இந்தச் சலுகை, வரிச் செலுத்துவோருக்கு ஓரளவேனும் உதவியாக இருக்கும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 31 வரை எல்ஐசி, பிபிஎஃப், என்எஸ்சி, இஎல்எஸ்எஸ் ஆகியத் திட்டங்களில் தங்களின் வரி சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்ளலாம். பழைய வரி நடைமுறையில் இந்தத் திட்டங்களுக்கான வரி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.