Published : 02 Jul 2020 01:39 PM
Last Updated : 02 Jul 2020 01:39 PM

200 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியம்; 9.78 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்பு- நவம்பர் வரை இலவசமாக விநியோகம்: ராம்விலாஸ் பாஸ்வான்

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக மொத்தம் 200 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும், 9.78 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் 20 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வரும் (நேரடி பலன் பரிவர்த்தனையில் வருபவர்கள் உட்பட) அனைத்துப் பயனாளிகளுக்கும் (அந்தியோதயா உணவுத் திட்டம் - AAY மற்றும் முன்னுரிமைக் குடும்பங்கள் - PHH) ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ கூடுதல் உணவு தானியங்கள் வழங்குவதற்கான வழிமுறை, தயார்நிலை மற்றும் அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்க காணொளி மூலம் ஊடகச் சந்திப்பு ஒன்றை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வான் இன்று நடத்தினார்.

அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ‘‘ஏழைகள் மற்றும் தேவை இருப்போர் பசியில் தவிக்காமல் இருப்பதற்கும், தற்போதைய கரோனா பெருந்தொற்று சமயத்திலும், மழைக்காலத்திலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்திலும் அவர்கள் இலவச ரேஷன் பொருள்களைப் பெறும் வகையிலும் இந்தத் திட்டத்தை நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும்’’ என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நவம்பர் 2020 இறுதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தக் காலகட்டத்தில், 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக மொத்தம் 200 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வழங்கப்படும். அதோடு, மொத்தம் 9.78 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் 20 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். இரண்டு திட்டங்களையும், அதாவது பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்-I மற்றும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்-II ஆகியவற்றை ஒன்று சேர்த்தால், மொத்த செலவு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள 80 கோடிக்கும் அதிகமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு, ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பருப்பு அவர்களின் வழக்கமான மாதாந்திர ஒதுக்கீட்டை தாண்டி கூடுதலாக தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அமைச்சகத்தின் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலவச உணவு தானியங்களின் விநியோகத்தை உடனடியாகத் தொடங்கி அடுத்த ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து வழங்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தற்போது கூடுதலாக 10 சதவீதம் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்கும் போது கூடுதலாக உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x