Published : 02 Jul 2020 12:42 PM
Last Updated : 02 Jul 2020 12:42 PM

ஜிஎஸ்டி வரி மேலும் எளிமையாக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி

வர்த்தகம் செய்வதை மேலும் எளிமையாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி வசூலை மேலும் எளிமையாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றாவது ஆண்டு தினம் சிபிஐசி மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் பல அலுவலகங்களில் நேற்று அனுசரிக்கப்பட்டது. சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கும், ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை என்ற குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லவும் இருந்த தடைகளை உடைப்பதற்கு ஜிஎஸ்டி கருவியாக இருந்தது. இந்த நாளைக் குறிக்கும் வகையிலான அனைத்து பங்குதாரர்களுடனான நிகழ்ச்சிகளும், கோவிட்-19 நிலைமைக்கேற்ப டிஜிட்டல் தளங்களில் வழியாகவே நடைபெற்றன.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி நாளையொட்டி வெளியிட்ட செய்தியில் பங்குதாரர்களின் கருத்துக்களுக்கேற்ப ஜிஎஸ்டி வரி நிர்வாகம் எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறினார். எனினும் வரி செலுத்துவதை மேலும் எளிமையாக்க, மேலும் பல முயற்சிகள் தேவைப்படுகின்றன.

மேலும் அவர் கூறுகையில் ‘‘பிரதமரின் “சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம்” என்ற அறைகூவலுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். வர்த்தகம் செய்வதை மேலும் எளிமையாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் வரி செலுத்துபவர்களுக்கு வரி நிர்வாகத்தை மேலும் எளிமையாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்வோம்.

வர்த்தக சமுதாயத்தினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து, அவற்றுக்கு முன்னதாகவே தீர்வு காண்போம்.
கரோனா பெருந்தொற்று நிலவும் இந்த மிகச் சோதனையான காலங்களில், மிகவும் பாராட்டத்தக்க பணிபுரிந்தமைக்காக சிபிஐசி அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

தங்கள் கடமையை மட்டும் ஆற்றாமல்; வரி செலுத்துவோர் நலனுக்காக அவர்கள் கரம்பிடித்து வழி நடத்தினார்கள். இந்த கோவிட்-19 காலத்தில் வரி செலுத்துபவர்களிடையே பணப்புழக்கம் இருக்கும் வகையில், அவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகையை, சாதனை அளவில் திருப்பிச் செலுத்தியமைக்காக பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x