Published : 02 Jul 2020 06:46 AM
Last Updated : 02 Jul 2020 06:46 AM

ரூ.1.5 லட்சம் கோடி திட்டப் பணிகள் நிறைவு; உலகிலேயே மிகப் பெரிய அணு உலை தயாரிப்பு: லார்சன் அண்ட் டூப்ரோ சாதனை

பிரான்சில் உள்ள அணு உலை ‘கிரையோஸ்டாட்’ மேல் பகுதியை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் நேற்று டெலிவரி செய்தது. உலகிலேயே மிகப் பெரிய அணு உலை கலனாக இது கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு 2,000 கோடி டாலராகும் (ரூ.1.50 லட்சம் கோடி).

கடந்த 2012-ம் ஆண்டு அழுத்த உலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பெற்றது. சுமார் 3,850 டன் எடை கொண்ட முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன இந்த உலையை தயாரித்து அதை நிறுவும் பணியை இந்நிறுவனம் ஏற்று அதன் இறுதி பகுதியாக மேல் பகுதியை தயாரித்து அனுப்பியது. உயர் அழுத்த கலனாக தயாரிக்கப்பட்ட இந்த கலன் உலகிலேயே மிகப் பெரியது.

உலையின் மேற்பகுதி

தற்போது தயாரித்து அனுப்பப்பட்ட மேற்பகுதியின் எடை 650 டன்னாகும். பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள அணு மின்ஆலைக்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலையின் அடிப்பகுதி மற்றும் நடுப்பகுதியை ஏற்கெனவே அனுப்பிவிட்டது. அதிக உயர் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலையானது, அணு உலையின் குளிர்விக்கும் பகுதியாகும்.

இந்தியாவுக்கு பெருமை

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் சர்வதேச அளவில் அணு கலன் தயாரிப்பில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கான விழா ஹஸிரா உற்பத்தி ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஐடிஇஆர் சர்வதேச பிரிவின் இயக்குநர் டாக்டர் பெர்னார்டு பிஜோட், அணுசக்தி கமிஷன் தலைவர் கே.என். வியாஸ், ஐடிஇஆர் இந்தியா பிரிவின் திட்ட இயக்குநர் யுகே பரூச், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், குழுமத் தலைவர் ஏ.எம்.நாயக், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x