3 வாரத்தில் 22-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: டீசல் லிட்டருக்கு ரூ.11.14 உயர்ந்தது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read


பெட்ரோல், டீசல் விலையை கடந்த 7-ம் தேதியிலிருந்து 22-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளன.

இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, நேற்று ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.38 பைசாவிலிருந்து, ரூ.80.43 பைசாவாக அதிகரி்த்துள்ளது.டீசல் ஒரு லிட்டர் ரூ.80.40 பைசாவிலிருந்து ரூ.80.53 பைசாவாக உயர்ந்துள்ளது.

மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.87.14 பைசாவிலிருந்து ரூ.87.19 ஆகவும், டீசல் ரூ.78.71 லிருந்து ரூ.78.83 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை இன்றைய நிலவரப்படி லிட்டர் ரூ.83.63 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.77.72 பைசாவுக்கும் விற்பனையாகிறது.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடுமுழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், மூத்த தலைவர்கள் அனைவரும் இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை மத்திய அரசின் அலுவலகங்கள் முன் அமர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அந்த கட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் , நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து காங்கிகரஸ் மூத்த தலைவர்கள் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் வரி உயர்வாகும். பெட்ரோல் விலையில் 63 சதவீதம் அதாவது 50.69 ரூபாயை வரியாகச் செலுத்துகிறோம். இதில் 32.98 ரூபாயை மத்திய அரசுக்கு உற்பத்தி வரியாகவும், 17.71 ரூபாயை மாநில அரசுகளுக்கு வாட் வரியாகவும் செலுத்துகிறோம்

டீசலில் ஒரு லிட்டர் விலையில் ரூ.49.43 அல்லது 63 சதவீதம் வரியாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதில் உற்பத்தி வரியாக 32.98 ரூபாயும், வாட் வரியாக 17.71 ரூபாயும் இடம் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in