Published : 29 Jun 2020 07:12 AM
Last Updated : 29 Jun 2020 07:12 AM

சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க சர்வதேச தரத்துக்கு இந்திய பொருட்கள் உற்பத்தி: மாருதி சுஸுகி தலைவர் வலியுறுத்தல்

மாருதி சுஸுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா நேற்று கூறியதாவது:

அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் அதிக விலை கொடுக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பொருளை நீண்ட காலத்துக்கு இறக்குமதி செய்து கொண்டே இருப்பது வர்த்தக ரீதியில் சரியான நடவடிக்கையாக இருக்காது. ஒரு சில பொருட்கள் இந்தியாவில் கிடைக்காது என்ற சூழலில் அவற்றை இறக்குமதி செய்யலாம். ஆனாலும் அவற்றின் தரம், விலை ஆகியன முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ரூபாயின் மாற்று மதிப்பு சரிவடையும் சூழலில் இறக்குமதி செய்வது அதிக செலவு பிடிக்கும் விஷயம் என்பது அனைவரும் அறிந்ததே. 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருளுக்கு அளிக்கப்பட்ட விலை தற்போது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை கூடுதலாக அளிக்க வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இறக்குமதி செய்வது என்பது நீண்ட காலத்துக்கு லாபகரமானதாக நிச்சயம் இருக்காது.

சீன இறக்குமதியை தடை செய்வதற்கு முன்பு இந்திய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அத்துடன் அது சர்வதேச தரத்தில் இருந்தால் மட்டுமே போட்டிகளை சமாளிக்க உதவும். பிரதமரின் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் இந்தியாவில் பொருட்கள் தயாரிக்கப்படும் பட்சத்தில் இறக்குமதிக்கு அவசியமே இருக்காது.

சீனப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்துவது என்ற உணர்வுபூர்வமான முடிவை ஆட்சியாளர்கள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகுதான் மேற்கொள்வர். இதேபோன்ற மன ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும் சில காலத்துக்கு முன்பு ஏற்பட்டது.

‘ஒரு பொருள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை அல்லதுஅவை தயாரிப்பதற்கு அதிகசெலவாகும் அல்லது தரமானவையாக இல்லை’. இந்த காரணங்கள் தவிர வேறெதுவும் இறக்குமதி செய்வதற்கானதாக இருக்க முடியாது.

அத்தியாவசிமல்லாத பொருளாக இருப்பின் அது இறக்குமதி செய்யாவிடில் பாதிப்பு ஏற்படாது. அது அவசியமானதாய் இருந்து அதை இறக்குமதி செய்யாமல் இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு சீனாவை விட இந்தியாவுக்கு அதிகமாகத்தான் இருக்கும் என்றார். இறக்குமதி தடையால் நமக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை ஆராய வேண்டிய தருணமிது. இவ்வாறு பார்கவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x