

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12% ஆக அதிகரித்துள்ளதாக தரவுகள் ஆய்வு நிறுவனமான குளோபல் டேட்டா கூறுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 12 % அதிகரித்த சீன முதலீடுகள் ரூ.34 ஆயிரத்து 730 கோடியாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக குளோபல் டேட்டா தகவல் கூறியிருப்பதாவது:
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன முதலீடுகள் கடந்த 4 ஆண்டுகளில் 12% அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டில் சீன முதலீடுகள் சுமார் 34 ஆயிரத்து 370 கோடி என்ற அளவைத் தொட்டுள்ளது.
2016-ல் 381 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 2,877 கோடியாக இருந்த சீன முதலீடு 2019-ல் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 100 கோடி டாலர்களுக்கும் மேல் மதிப்பு கொண்ட யுனிகார்ன் நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சீனாவிலிருந்தே முதலீடுகள் வரப்பெற்றுள்ளன. இதில் ஆன்லைன் ஜெயண்ட் நிறுவனமான அலிபாபா மற்றும் டென்செண்ட் நிறுவனங்கள் பிரதான பங்களிப்பு செய்துள்ளன.
அலிபாபா மற்றும் ஆன்ட் பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் 4 முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.
பேடிஎம், ஸ்னாப்டீல், பிக் பேஸ்கெட், சொமாட்டோ ஆகிய நிறுவனங்களில் 19,630 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளன.
டென்செண்ட் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ஓலா, ஸ்விகி, ஹைக், ட்ரீம் 11, மற்றும் பைஜு இந்தியா, ஆகிய 5 நிறுவனங்களில் ரூ.18,120 கோடி முதலீடு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள 24 யுனிகார்ன் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் சீன முதலீடுகளைப் பெற்றுள்ளன.
என்று குளோபல் டேட்டா தெரிவித்துள்ளது.