Published : 27 Jun 2020 10:25 PM
Last Updated : 27 Jun 2020 10:25 PM

உ.பி.க்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: வேளாண் அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி

ஜுன்ஜுனுவில் (ராஜஸ்தான்) வெட்டுக்கிளிக் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி காலையில் காணப்பட்டது. இதையடுத்து இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அங்கிருந்து வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து, நேற்று மாலை ஹரியாணாவின் ரெவாரியை அடைந்தன. அங்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் இன்று காலை வரை நடைபெற்றன. அதில் எஞ்சிய வெட்டுக்கிளிகள் மீண்டும் ஒரு குழுவாகச் சேர்ந்து, மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, ஒரு பிரிவு குருகிராமுக்கும், அங்கிருந்து பரிதாபாத்துக்கும் சென்று உத்தரப்பிரதேசத்தை நோக்கிப் படையெடுத்தன.

மற்றொரு வெட்டுக்கிளிக் கூட்டம் டெல்லியில் துவாரகாவை நோக்கி நகர்ந்தது. அங்கிருந்து, தவுலதாபாத், குருகிராம், பரிதாபாத் வழியாக உ.பி.யை அடைந்தது. மூன்றாவது குழு பல்வாலில் (ஹரியாணா) காணப்பட்டது. அதுவும் உ.பி.யை நோக்கி நகர்ந்தது. தற்போது, எந்த நகரப் பகுதியிலும் வெட்டுக்கிளிக் கூட்டம் தென்படவில்லை.

வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின் படி, ராஜஸ்தான், ஹரியாணா, உ.பி ஆகிய மாநிலங்களின் வேளாண் துறைகளைச் சேர்ந்த குழுக்கள், இந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தை தேடி வருகின்றன. இந்த மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள், மத்திய வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் அதிகாரிகளும் இதில் சேர்ந்துள்ளனர்.

அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஹரியாணா, உ.பி ஆகிய இரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உதவுவதற்காக, ராஜஸ்தானிலிருந்து மேலும் கட்டுப்பாட்டு குழுக்கள் சென்றுள்ளன.

வெட்டுக்கிளிக் கூட்டம் பகல் நேரத்தில் தொடர்ந்து பறந்து, மாலையில் இருட்டு வந்த பின்னர் அந்த இடத்திலேயே தங்கி விடும். களக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, அவை தங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிந்து, மிகப்பெரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உ.பி.யைச் சேர்ந்த கட்டுப்பாட்டு குழுக்கள் இது குறித்து உஷார்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x