

ரிசர்வ் வங்கி அரை சதவீதம் வட்டியைக் குறைத்துள்ளதால் முதலீடுகள் பெருகும். இதனால் பொருளதாரம் வளர்ச்சியடையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுக்குள் உள்ள சூழலில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை மிகவும் தேவையான ஒன்று என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பெரிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் தேவையான நிதியைத் திரட்டிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்திருப்பதையும் அவர் வரவேற்றார். ரூபாய் அடிப்படையிலான இந்தக் கடன்பத்திரங்கள் வழக்கமாக மசாலா பத்திரங்கள் என அழைக்கப்படுவவதை சுட்டிக் காட்டிய அவர், இப்போதைய வட்டிக் குறைப்பு நடவடிக்கை இந்திய நிறுவனங்களுக்கு மேலும் சாதகமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நான்காவது நிதிக் கொள்கை இதுவாகும். இந்த வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டியை எந்த அளவுக்குக் குறைக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வட்டிக் குறைப்பு நடவடிக்கையின் பலனாக பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு நம்பிக்கையும் உருவாகும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
ரூபாய் அடிப்படையிலான கடன் பத்திரங்கள் குறித்து பேசிய பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்தி காந்த தாஸ், இதுபோன்ற கடன் பத்திரங்கள் சர்வதேச சந்தையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், நிறுவனங்கள் வெளியிடும் இத்தகைய கடன் பத்திரங்கள் ரூபாய் மாற்று விகிதத்தால் பாதிக்கப்படாது என்று குறிப்பிட்டார்.
போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தற்போது முதல் முறையாக மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வழியேற்பட்டுள்ளது. இது போன்ற கடன் பத்திர வெளியீட்டுக்குத்தான் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது என அவர் கூறினார்.