Published : 24 Jun 2020 09:36 PM
Last Updated : 24 Jun 2020 09:36 PM

கால்நடை சார்ந்த தொழில்களுக்கு கடன் திட்டம்: 3% வட்டித் தள்ளுபடி அறிவிப்பு

பல்வேறு துறைகளில் வளர்ச்சியை உறுதி செய்ய சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுய-சார்பு இந்தியா ஊக்கத் தொகுப்பின் தொடர்ச்சியாக, ரூ 15,000 கோடி மதிப்புள்ள கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை நிறுவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பால்வள உள்கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக பால்வளக் கூட்டுறவுத் துறையால் செய்யப்பட்ட முதலீட்டை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதற்காக சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களையும் முன்னிறுத்தி, ஊக்கப்படுத்த வேண்டும் என்று அரசு உணர்கிறது.

பால்வளம், இறைச்சிப் பதனிடுதல் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பில் செய்யப்படும் அத்தகைய முதலீடுகளுக்கும், தனியார் துறையில் விலங்குத் தீவன ஆலையை நிறுவுவதற்கும் மிகவும் தேவைப்படும் ஊக்கத்துக்கு கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி வழி வகுக்கும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதலீட்டு நிதி பங்களிப்பு அளிக்கும் தனிப்பட்டத் தொழில் முனைவோர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் தகுதியான பயனாளிகளாக இருப்பர். பட்டியல் வங்கிகளால் வழங்கப்படும் கடன் வசதி மீதி 90 சதவீதமாக இருக்கும்.

தகுதியான பயனாளிகளுக்கு 3 சதவீதம் வட்டித் தள்ளுபடியை இந்திய அரசு வழங்கும். அசல் கடன் தொகைக்கு 2 வருடங்கள் தடைக்காலம் இருக்கும். அதன் பிறகு ஆறு ஆண்டுகளில் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும்.

நபார்டால் நிர்வகிக்கப்பட இருக்கும் ரூ 750 கோடி கடன் உத்தரவாதத் தொகையையும் இந்திய அரசு நிறுவும். சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ள வரம்புகளுக்குள் வரும் ஒப்புதலளிக்கப்பட்ட திட்டங்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்கப்படும். கடன் வாங்குபவரின் கடன் வசதியில் 25 சதவீதம் வரை உத்தரவாதம் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x