

இந்தியா - சீனா எல்லையில் நடந்துவரும் சண்டைக்குப் பிறகு சீனப்பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடம் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.என்.சுப்ரமணியன், ‘‘சீனப் பொருட்களை நம்பியிருப்பதை படிப்படியாகக் குறைக்க இதுதான் சரியான நேரம். சீனப் பொருட்களுக்கு மாற்றான சந்தையை உருவாக்கும் முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
அரசின் சுயசார்பு கொள்கையை எல் அண்ட் டி வரவேற்கிறது. அதற்கு தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கதயாராக இருக்கிறது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் அதற்கு மாற்றான சந்தையை இந்தியாவுக்குள் நாம் உருவாக்க வேண்டும். இந்திய தொழில்துறையை மேம்படுத்த வேண்டும். அதற்கு தேவையான கொள்கைகள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கு இது சரியான நேரம். நமக்கான சந்தையை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய தருணம். மேக் இன் இந்தியா திட்டத்தை நீண்ட காலத்துக்கான திட்டமாக கொண்டு செல்லவும் சர்வதேச சந்தையில் சீனாவுக்கு மாற்றான சந்தையாக நாம் மாறவும் தேவையான தொழில் சூழலை உருவாக்க வேண்டும். அந்த வகையில் எல் அண்ட் டி நிறுவனம் முடிந்த பங்களிப்பை வழங்கவும் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.