Published : 23 Jun 2020 03:54 PM
Last Updated : 23 Jun 2020 03:54 PM

கரோனா ஊரடங்கு; 2 கோடி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.4957 கோடி நிதியுதவி

கரோனா தொற்றை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் போது இரண்டு கோடி கட்டிட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,597 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை 24 மார்ச், 2020 தேதியிட்டு அனுப்பிய கடிதத்தின்படி, ஊரடங்கின் போது, நாடு முழுவதும் உள்ள பதிவுபெற்ற சுமார் இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, மாநில அரசுகள், இதுவரை சுமார் ரூ.4,957 கோடியை ரொக்க உதவியாக வழங்கியுள்ளன. இதில், சுமார் 1,75 கோடி பரிமாற்றங்கள், நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பண உதவி தவிர, சில மாநிலங்கள், ஒவ்வொரு தொழிலாளருக்கும் சுமார் ரூ.1,000 முதல் ரூ.6,000 வரையிலான உதவிகளையும் ஊரடங்கின்போது வழங்கியுள்ளன. வேறு சில மாநிலங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் ரேஷன் பொருள்களையும் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன.

கோவிட்-19 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சவாலான காலகட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, மாநில அரசுகள் மற்றும் மாநில நல வாரியங்களுடன் இணைந்து, கட்டுமானத் தொழிலாளர் நலன் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நிதியுதவிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்தது.

இந்தியாவில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின், கட்டிட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள், மிகவும் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களாக உள்ளனர். எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில், மோசமான சூழலில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகவும், தங்களது சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பணிபுரியக் கூடியவர்களாகவும் உள்ளனர். தேச வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கும் போதிலும், சமுதாயத்தின் விளிம்பு நிலையிலேயே உள்ளனர்.

தொழிலாளல் நலச் சட்ட விதி 22(1) (h)-இன்படி, தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில், நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் , போதுமான நிதியை வழங்குமாறு, மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர், 24 மார்ச், 2020 அன்று, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிய ஆலோசனைக் கடிதத்தை, உரிய நேரத்தில் அனுப்பியிருந்தார். தொழிலாளர்கள் உயிர்வாழத் தேவையான அளவிற்கு, எவ்வளவு நிதியை வழங்கலாம் என்பதை, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுமானத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பண நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவும் நோக்கில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்ற ஒரு கடிதத்தை, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளரும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியதோடு, அவ்வப்போது காணொலிக் காட்சி மூலமும், இந்த ஆலோசனை பின்பற்றப்படுவதை கண்காணித்து வந்தார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x