

இந்தியா - சீனா இடையேயான எல்லை தாக்குதல் விவகாரத்தைத் தொடர்ந்து சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்கான உபகரணங்களுக்குச் சீனாவை நம்பியிருக்கும் நிலையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்த இந்திய டெலிகாம் துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய செல்லுலார் ஆப்பரேடர்கள் கூட்டமைப்பு, ‘‘நாடுகளுக்கு இடையேயான (புவிசார்) அரசியல் பிரச்சினைகள் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், கார்ப்பரேட் முடிவுகள் இந்தப் பிரச்சினைகளில் இருந்து அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்’’ என்றும் கூறியுள்ளது.
செல்லுலார் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பில் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகியவையும் உள்ளன. இதுவரைதனியார் நிறுவனங்கள் தங்களுக்கான உபகரணங்களைப் பெறுவதில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தற்போது சீனா - இந்தியா இடையே எல்லை தாக்குதல் பிரச்சினை மூண்டுள்ள நிலையில் அரசு புதிய விதிகளை வகுக்குமானால் அதற்கு கட்டுப்பட வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு உள்ளது.
ஆனாலும் புவிசார் அரசியல் தொடர்பான அரசின் முடிவுகள் தனித்துவமானதாக இருக்க வேண்டும். இவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வர்த்தகம் சார்ந்த முடிவுகளை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று செல்லுலார் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறியுள்ளார்.
டெலிகாம் துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் மொபைல் போன்றவற்றில் முன்னணி பிராண்டுகளாக சீன பிராண்டுகளே உள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் மொபைல்களில் 76 சதவீதம் சீன பிராண்டுகள்தான். புதன்கிழமை ஓப்போ மொபைல் நிறுவனம் தனது புதிய 5ஜி மொபைலை நேரலையில் அறிமுகம் செய்யவிருந்தது. ஆனால், சீனப் பொருட்களுக்குஎதிராக எதிர்ப்பு கிளம்பவே அந்நிகழ்ச்சியை ரத்து செய்தது.