Published : 19 Jun 2020 07:08 AM
Last Updated : 19 Jun 2020 07:08 AM

இந்திய - சீன பொருட்கள் சப்ளை பாதிக்கும் அபாயம்

இந்தியா, சீனா இரு நாடுகளிடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு மோதல் உருவாகி உள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் அமைதியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

எனினும் அலிபாபா குழுமம் ஹோல்டிங் லிமிடெட், ஜியோமி கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையே பொருட்கள் விநியோக சங்கிலி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பல நிறுவனங்கள்மாற்று வழிகளை ஆராயத் தொடங்கி உள்ளதாக ஸ்டார்ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி அனீஷ் வத்ஸவா தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு தயாரிப்பு நிறுவனங்கள், பேக் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் மாற்று வழிகளை ஆராயத் தொடங்கி உள்ளன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது சீனாவில் இருந்துமூலப்பொருட்கள் பல இந்தியாவுக்கு வருவது பாதிக்கப்பட்டது. அதில் இருந்து நிலைமை மாறி சீரான சூழலில் தற்போது எல்லையில் உருவான பதற்றம் மீண்டும் பொருட்கள் சப்ளையை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் இரு பெரும் நாடுகளான சீனா, இந்தியாஇடையே இதற்கு முன்பு 1962-ம்ஆண்டில் போர் உருவானது. எல்லை பிரச்சினை தொடர்பாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இரு நாடுகளிடையே பிரச்சினை உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதோடு டேட்டா மையத்தையும் இந்தியாவில் நிறுவியுள்ளது. அதன் யுசி பிரவுசர் ஸ்மார்ட்போன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல சீனாவைச் சேர்ந்த ஜியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 29 சதவீதத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் சந்தை வாய்ப்புக்கு முட்டுக்கட்டை ஏற்பட்ட சூழலில் சீனாவின் ஹூயாவெய் நிறுவனம் இந்தியாவில் செயல்பட கடந்த ஆண்டு அனுமதி பெற்றுள்ளது. இந்நிறுவனம் 5-ஜி சேவையைஅளிக்க அனுமதி பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸின் அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சீனாவில் தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளிடையிலான பதற்றம் அந்நிறுவன தயாரிப்பு விற்பனையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதேபோல இ-காமர்ஸ் நிறுவனங்களான ஓலா, ஸ்விக்கி, டென்சென்ட், போசுன் கேபிடல் ஆகியவற்றிலும் சீன நிறுவனங்களின் முதலீடுஉள்ளது. மேலும் டாக்டர் ரெட்டீஸ்லேபரட்டரீஸ் லிமிடெட், அரபிந்தோ பார்மா லிமிடெட் ஆகியன சீனாவில் இருந்து மூலப் பொருகட்களை இறக்குமதி செய்வது மற்றும் மருந்துகளை ஏற்றுமதி செய்வதிலும் ஈடுபட்டுள்ளன. இதேபோல வோல்டாஸ், பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் ஆகியன சீனாவில் இருந்து பெருமளவு பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

இதேபோல ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பலவும் சீனாவில் இருந்து பொருட்களை வாங்குகின்றன. இவையும் தடைபடும் அபாயம் உருவாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x