Published : 18 Jun 2020 09:54 PM
Last Updated : 18 Jun 2020 09:54 PM

5 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கார்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்: நிதின் கட்கரி நம்பிக்கை

புதுடெல்லி

ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சாரக் கார்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர ரகத் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்துறைக்கு முடிந்த அளவு சலுகைகள் அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும், மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

‘கோவிட்-19க்கு பிந்தைய காலத்தில் இந்தியாவின் மின்சார வாகனத் திட்டம்’ என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கில் இன்று உரையாற்றிய அமைச்சர் கூறுகையில், மின்சார வாகனத்துறை சந்திக்கும் பிரச்சினைகளை தான் அறிந்திருப்பதாகவும், இவற்றின் விற்பனைகள் அதிகரிக்கும் போது மாற்றங்கள் ஏற்படுவது நிச்சயம் என்றார். சீனாவுடன் வர்த்தகம் செய்ய எந்த நாடும் விரும்பவில்லை எனவும், இந்த வர்த்தகங்களை இந்தியத் தொழில்துறை எடுத்துக் கொள்ள, இது நல்ல வாய்ப்பு எனவும் அவர் கூறினார்.

பெட்ரோலிய எரிபொருள் குறைந்த அளவில் கிடைப்பதால், மலிவான மாற்று எரிசக்தியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என நிதின் கட்கரி கூறினார். இதற்கு மின்சாரம் மற்றும் உயிரி எரிபொருள்கள் நல்ல வாய்ப்பாக உள்ளது என அவர் கூறினார். பழைய வாகனங்கள் ஒழிக்கும் கொள்கையைத் தொடர்வது, வாகன உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

லண்டன் பொதுப்போக்குவரத்தில், அரசு மற்றும் தனியார்துறை இணைந்து முதலீடு செய்வது சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். இதே போன்ற அணுகுமுறையைப் பின்பற்றுவது, ஏழைப் பயணிகளுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார். வரவிருக்கும் டெல்லி-மும்பை பசுமை வளாகத்தில், மின்சார

நெடுஞ்சாலை உருவாக்குவதை முன்னணித் திட்டமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

வாகனத்துறையின் திறனில் முழு நம்பிக்கை தெரிவித்த நிதின் கட்கரி, இந்த பொருளாதார நெருக்கடியிலும், நிலைத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையுடன், இத்துறையால் நல்ல சந்தை வாய்ப்புகளைப் பெறமுடியும் என்றார். வாகனத்துறை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x