Published : 18 Jun 2020 04:32 PM
Last Updated : 18 Jun 2020 04:32 PM

6 மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி


6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் ஊர் திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறமையை கண்டறிந்து மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாட்டின் கிராமப்புற மக்களுக்கும் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்கான மாபெரும் கிராமப்புற பொதுப்பணி திட்டமான ‘கரீப் கல்யான் ரோஜ்கார் அபியான் எனப்படும் ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்பு இயக்கத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து ராஜ், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, சுரங்கத்துறை, குடிநீர் மற்றும் துப்புரவு, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லைப்புறச் சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் வேளாண்மை போன்ற, 12 பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

இந்தத் திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி, 20 ஜுன், 2020 அன்று பகல் 11 மணியளவில், பிஹார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில், காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். பிஹார் மாநிலம் ககாரியா மாவட்டம் பெல்தார் வட்டத்திற்குட்பட்ட தெலிஹார் கிராமத்தில், இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மேலும் 5 மாநில முதல்வர்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கான மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் வாயிலாக இந்திட்டத்தில் பங்குபெறுவதுடன், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று சமூகவலைதளங்கள் வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிஹார், உத்தரபிரப்தேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்கள் உட்பட, மொத்தம் 116 மாவட்டங்கள், இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

125 நாட்களுக்கு, மாபெரும் பணி அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 25 வகையான பணிகளை வேலைவாய்ப்பு அளித்து, நாட்டின் கிராமப்புறங்களில் தகுந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு, மறுபுறம் ரூ.50,000 கோடி நிதி ஆதாரத்திற்கும் வழிவகுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் ஊர் திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறமையை கண்டறிந்து மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x