

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் லிட்டருக்கு 53 பைசாவும், டீசலில் லிட்டருக்கு 64 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.
கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதுவரை பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.6.55 பைசாவும், டீசலில் லிட்டருக்கு ரூ.7.04 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று ஒரு லி்ட்டர் பெட்ரோல் விலை ரூ.77.28 பைசாவிலிருந்து, இன்று ரூ.77.81 பைசாவாக அதிகரித்துள்ளது. அதேபோல டீசல் ஒரு லிட்டர் ரூ.75.79 பைசாவிலிருந்து, ரூ.76.43 பைசாவாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி, விற்பனை வரி அடிப்படையில் இந்த விலை மாறக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.32 பைசாவாக அதிகரித்துள்ளது, டீசல் ஒரு லிட்டர் ரூ.74.23 பைசாவாக உயர்ந்துள்ளது
லாக்டவுன் காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை.
ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் சுமையை மக்கள் மீது தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றி வருகின்றன.
டீசல் விலை இதுவரை லிட்டருக்கு 7 ரூபாய் அதிகரித்து இருப்பதால், சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணத்தையும் லாரி உரிமையாளர்கள் உயர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸ் லாக்டவுனால் லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு அவர்களை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கும்.
இந்த விலை உயர்வை அவர்கள் சமாளிக்க முடியாமல் சரக்குக் கட்டணத்தை ஏற்றினால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை வரும் நாட்களில் உயர்ந்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த இரு நாட்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் " மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த இதுவரை 12 முறை பெட்ரோல், டீசலில் உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளது. இதுவரை டீசல் மீது லிட்டருக்கு ரூ.28.37 பைசாவும் உற்பத்தி வரியை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி 258 சதவீதமும், டீசல் மீது 820 சதவீதமும் உயர்த்தப்பட்டு, அதன் மூலம் ரூ.18 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது" எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த சூழிலல் கடந்த மார்ச் மாதம் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 3 ரூபாயும், கடந்த மே மாதம் பெட்ரோல் மீது லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீது ரூ.13 உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த பலன்களை மக்களுக்கு அளித்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை இந்த அளவு உயர்ந்திருக்காது.