சர்வதேச பொருளாதார பிரச்சினைகள் தற்காலிகமானவை: ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் அருண் ஜேட்லி

சர்வதேச பொருளாதார பிரச்சினைகள் தற்காலிகமானவை: ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் அருண் ஜேட்லி
Updated on
1 min read

சீனா நாணயத்தின் மதிப்பை குறைத்தது, அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கணிப்பு உள்ளிட்டவை தற்காலிகமானவை. உண்மையான பொருளாதாரமே இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இந்திய பங்குச்சந்தையின் போக்கினை தீர்மானிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியவதாவது:

அரசாங்கம் உண்மையான பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது. உற்பத்தி மற்றும் சேவை துறை இப்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த நிலைமையில் உண்மையான பொருளாதார நிலைமையும், சர்வதேச நிலைமையின் தாக்கத்தையும் பிரித்து பார்க்க வேண்டும். சர்வதேச பிரச்சினைகள் முடிந்த பிறகு உண்மையான பொருளாதாரம் முக்கியமானதாகும். அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகிறது.

சர்வதேச ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். சீன நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது, அதன் காரணமாக பங்குச்சந்தை சரிந்தது ஆகிய காரணங்களால் இதற்கான தேவை உருவாகியுள்ளது.

வேகமான பிரத்யேகமான பாதுகாப்பு அமைப்பை சர்வதேச செலாவணி மையத்தின்கீழ் உருவாக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அடிப்படை பலமாக உள்ளது. இப்போது அமெரிக்காவில் இருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது. அங்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது மற்றும் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி உயர்ந்திருக்கிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அவர்களின் நாடுகளில் நடந்திருக்கும் விஷயங்களை பற்றி விவரித்தனர். இந்தியாவை பொறுத்தவரை பங்குச்சந்தை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. அதுவும் வெளிநாட்டு சூழல்கள் காரணமாகவே இந்த நிலைமை நீடிக்கிறது.

அமெரிக்க வட்டி விகிதம் குறித்த முடிவுகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் என்னை பொறுத்தவரை எந்த சூழ்நிலை உருவானாலும், அது தற்காலிகமானதுதான். எங்களுடைய பொருளாதாரத்தை நாங்கள் பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். பெரும்பாலான நாடுகள் வளர்ச்சி மற்றும் கரன்ஸி ஏற்ற இறக்கங்களில் சிக்கி தடுமாறுகின்றன. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களுடைய கொள்கை முடிவுகளை வகுத்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.

துருக்கி தொழிலதிபர்களிடம் பேசிய ஜேட்லி பெரும்பாலான துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.

சீனா கரன்ஸி மதிப்பு குறைந்த விஷயம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் இது குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. செயற்கையாக பண மதிப்பை குறைப்பதை தவிர்த்துவிட்டு, சந்தையால் தீர்மானிக்கப்படும் முறைக்கு மாறுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in