Published : 17 Jun 2020 06:39 AM
Last Updated : 17 Jun 2020 06:39 AM

2019-ம் ஆண்டு 51 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் அந்நிய முதலீட்டை கவர்வதில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியா 51 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இது கடந்த 2018-ல் 42 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த 2018-ல் உலகின் மிக முக்கியமான 20 பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 12-ம் இடத்தில் இருந்தது. தற்போது 9-ம் இடத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகமாக ஈர்க்கும் முதல் 5 ஆண்டுகளில் இந்தியா உள்ளது. ஆசிய கண்டத்தின் மொத்த அந்நியநேரடி முதலீடு 474 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். ஆனால், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா மற்றும்சீனா ஆகியவற்றின் அந்நிய முதலீடு முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால், கரோனா பாதிப்பின் காரணமாக உலகப் பொருளாதாரம் முடங்கியுள்ளதால் 2020-ம் ஆண்டுக்கான ஆசிய கண்டத்தின்அந்நிய நேரடி முதலீடு முந்தையஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம்குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தெற்காசிய நாடுகளில் அதிக அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நாடாக இருக்கும் இந்தியா 70 சதவீத பங்கு வகிக்கிறது. தெற்கு ஆசியாவின் அந்நிய முதலீடு 10 சதவீதம் அதிகரித்து 57 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் அந்நிய முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 51 பில்லியன் டாலராக உள்ளது. அதேசமயம் கிரீன்ஃபீல்ட் முதலீடு அறிவிப்புகள் 4 சதவீதம் குறைந்துள்ளது.

ஆயினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து முதலீட்டைஈர்க்கும் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ல் உலகின் மொத்த அந்நியநேரடி முதலீடு 1.54 டிரில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு மதிப்பிடப்பட்டது. இது 2020-ம் ஆண்டில் 40 சதவீதம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-ல் உலகின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 1 டிரில்லியன் டாலரைக் காட்டிலும் குறைவாக இருந்தது. அதன்பிறகு நடப்பாண்டில்தான் மிகப்பெரிய வீழ்ச்சியை அந்நிய நேரடி முதலீடு சந்திக்க உள்ளது.

கரோனா பாதிப்புக்குப் பிறகான உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும். நீண்டகால வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் சாத்தியக்கூறுகளையும் இந்தியா கொண்டுள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-ன் முதல் காலாண்டில் 650 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பான்மை முதலீடு தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறையிலும், கட்டுமான துறையிலும் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x