Last Updated : 16 Jun, 2020 10:03 AM

 

Published : 16 Jun 2020 10:03 AM
Last Updated : 16 Jun 2020 10:03 AM

பெட்ரோல் லிட்டர் ரூ.80-ஐ தொட்டது: தொடர்ந்து 10-வது நாளாக விலை உயர்வு: விமான எரிபொருள் விலையும் இம்மாதத்தில் 2-வது முறையாக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், தொடர்ந்து 10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் விமானங்களுக்கான ஏடிஎப் எரிபொருள் விலையும் 16.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த மாதத்தில் 2-வது முறையாக விமான எரி்பொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டர் ரூ5,499.50 உயர்த்தப்பட்டு, டெல்லியில் ரூ.39,069.87ஆக அதிகரித்துள்ளது.கடந்த 1-ம் தேதி விமான எரிபொருள் விலை 56.5 சதவீதம் அதாவது ரூ.12,126 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கரோனா வைரஸால் லாக்டவுனால் விமான நிறுவனங்கள் முழுமையாக இயக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில் எரிபொருள் விலை உயர்வு மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும். இந்த விலை உயர்வின் சுமை பயணிகள் மீதே வரும் காலத்தில் திணிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 47 பைசாவும், டீசல் லிட்டருக்கு 93 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லி்ட்டர் ரூ.76.26 பைசாவிலிருந்து ரூ.76.73 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லி்ட்டர் ஒன்றுக்கு ரூ.74.26 லிருந்து, ரூ.75.19 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.41 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.73.17 ஆகவும் அதிகரி்த்துள்ளது.

கடந்த 10 நாட்களில் தொடர்ந்து விலைஅதிகரிப்பால் பெட்ரோலில் லி்ட்டருக்கு ரூ.5.47 ைபசாவும், டீசலில் லிட்டருக்கு ரூ.5.80 பைசாவும் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு மாநில அரசுகளின் வாட் வரிக்கு ஏற்ப மாறுபடும்.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நாள்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டம் கொண்டுவந்தபின், டீசல் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது இதுதான்முதல் முறையாகும்.

கடந்த 83 நாட்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் தாக்கத்தை உடனடியாக மக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் சுமத்துகின்றன.

கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் 14-ம் தேதி பெட்ரோல், டீசலில் உற்பத்தி வரியை லிட்டருக்கு 3 ரூபாயும், கடந்த மே 5-ம் தேதி பெட்ரோலில் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியாக மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.

இந்த உற்பத்தி வரியை மத்திய அரசு விதிக்காமல் அதன் பலன்களை நுகர்வோருக்குத் திருப்பியிருந்தால், இந்த அளவு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் நவம்பரில்தான் கச்சா எண்ணெய் விலை உச்சபட்சமாக அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. அதன்பின் இப்போது அந்த விலைக்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலை வந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x