Published : 13 Jun 2020 06:06 AM
Last Updated : 13 Jun 2020 06:06 AM

ஜிஎஸ்டி வரி தாக்கலில் சிறு வணிகர்களுக்கு சலுகை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வதில் சிறு வணிகர்களுக்கு மிகப் பெரும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு விதிக்கப்படும் அபராதம் அதிகபட்சம் ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 40-வது கூட்டம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை யில் டெல்லியில் நேற்று காணொலிக் காட்சி மூலம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் வரித் தொகைக்கான வட்டி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரூ.5 கோடி வரையிலான வருவாய் உள்ள சிறிய வர்த்தகர்கள், மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான ஜிஎஸ்டி ஆர்-3பி படிவத்தை தாமதமாக செப்டம்பரில் தாக்கல் செய்தால் அபராத தொகை, வட்டி விதிக்கப்படாது.

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் நிலுவைத் தொகை ஏதும் இல்லாதவர்கள் (அதாவது ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரை) தாமதமாக வரி தாக்கல் பதிவு செய்தாலும் அபராதம் ஏதும் விதிக்கப்படாது. நிலுவை உள்ளவர்கள் (ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்) தாமதமாக படிவம் தாக்கல் செய்தாலும் அவர்களுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.500-க்கு மேல் அபராதம் விதிக்கப்படாது. மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வரை வரி செலுத்துவோருக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு வரி தாக்கல் படிவம் தாக்கல் செய்வதற்கான அபராத தொகை, வட்டி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த மாதங்களுக்கான வரி தாக்கலை செப்டம்பரில் கட்டாயம் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூலையில் மீண்டும் கூடி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு செஸ் (வரி) குறித்து விவாதிக்கப்படும். கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலத்தில் மாநிலங் களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.36,400 கோடியாகும். இத்தொகையை வெளிக்கடன் மூலம் திரட்டிக் கொள்ள அனுமதிக்குமாறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தொகையை வெளிச் சந்தையில் கடன் மூலம் திரட்டினால் அதை யார் செலுத்துவது, அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

2019-20 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.1.51 லட்சம் கோடியாகும். இதில் மார்ச் வரையான காலாண்டுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை நிலுவையில் உள்ளது.

வசூலில் தேக்கம்

ஊரடங்கு காலத்தில் வரி வசூல் அதிகமாக இருக்காது என்பதால், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மிகப் பெரும் சவாலாகும். இதை கருத்தில்கொண்டு இதுபற்றி அடுத்த கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஜவுளி, காலணி, உரம் உள்ளிட்டவற்றுக்கு வரியை குறைப்பது குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இவற்றுடன் பான் மசாலா பொருள் மீதான வரியை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x