தொழில் கலாச்சாரம்: புரட்சி பூமியில் வாய்ப்புகள் ஏராளம்!

தொழில் கலாச்சாரம்: புரட்சி பூமியில் வாய்ப்புகள் ஏராளம்!
Updated on
3 min read

ஈபிள் கோபுரம், லூவர் அருங்காட்சி யகம், வெர்ஸெயில்ஸ் அரண் மனை, நாட்டர்டாம் சர்ச், பனிமூடிய ஆல்ப்ஸ் மலை, பிரிட்டனி கடற்கரை, நெப்போலியன் நினைவுச் சின்னங்கள் எனச் சுற்றுலாப் பயணிகளை பரவசத்தில் ஆழ்த்தும் காட்சிகள் பிரான்சில் ஏராளம். இதனால் உலகிலேயே அதிகச் சுற்றுலாப் பயணிகள் வரும் நாடு பிரான்ஸ்தான். வருடத்துக்கு சுமார் 85 லட்சம் பேர் வருகிறார்கள்.

சுற்றுலாவில் மட்டுமல்ல, ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியிலும், உலகின் நம்பர் 1 பிரான்ஸ்தான். பிரான்சிலிருந்து நமது இறக்குமதி ரூ.27,030 கோடி. விமானங்கள், விண்கலங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், ரசாயனங்கள், மருந்துகள், பிளாஸ்டிக்ஸ் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. பிரான்சுக்கு நம் ஏற்றுமதி ரூ. 30,323 கோடிகள். முக்கிய ஏற்றுமதி பெட்ரோலியப் பொருட்கள், பின்னலாடைகள், பிற ஜவுளி சாமான்கள், தோல் தயாரிப்புகள், காலணிகள் போன்றவை.

பூகோள அமைப்பு

பரப்பளவு 5,43,965 சதுர கிலோமீட்டர். தெற்கில் ஆல்ப்ஸ் மலைத்தொடர். மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு காடுகள். வளமான பூமி. கோதுமை, திராட்சை முக்கிய பயிர்கள். தலைநகரம் பாரிஸ்.

மக்கள் தொகை

6 கோடி 65 லட்சம். சுமார் 66 சதவீதம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்: முஸ்லிம்கள் 9 சதவீதம்: யூதர்கள், புத்த மதத்தினர் தலா 7 சதவீதம். பேசும் மொழி பிரெஞ்சு. ஆங்கிலம் தெரிந்தாலும், பிரெஞ்சில் பேசுவதில் பெருமைப்படுபவர்கள். உறவை வளர்க்கச் சிறந்த வழி, அவர்களிடம் பிரெஞ்சில் உரையாடுவது.

சுருக்க வரலாறு

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மனித வாழ்க்கை தொடங்கியதாக அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நம்புகிறார்கள். ரோம சாம்ராஜியத்தின் கட்டுப்பாட்டில் பல நூற்றாண்டுகள். பிறகு பல்வேறு அரச பரம்பரைகள் ஆண்டார்கள். பிரிட்டனோடு நடந்த ஏழு வருடப் போரால், பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.

1789 இல், பிரெஞ்சுப் புரட்சி என்னும் மக்கள் எழுச்சி வந்தது, சாமானியரான நெப்போலியன் சக்கரவர்த்தியானார். பிரான்சுக்கும், இங்கிலாந்துக்குமிடையே தொடர்ந்து பல யுத்தங்கள் நடந்தன. பின் வந்த சமாதான ஒப்பந்தம் மூலமாக, பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய இந்தியப் பகுதிகள் பிரெஞ்சு காலனிகளாயின. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டின் பகுதிகளாயின. முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரான்சும், பிரிட்டனும் கை கோர்த்தன. பலமுறை, மக்களாட்சி வந்தது, கவிழ்ந்தது . 1958 ல் வந்த ஐந்தாவது குடியரசு இப்போது தொடர்கிறது.

ஆட்சி முறை

மக்களாட்சி நடக்கிறது. 18 வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. ஆட்சித் தலைவர் பிரதமர்.

நாணயம்

ஐரோப்பிய நாடுகளின் பொது நாணயமான யூரோ (Euro) தான், பிரான்சின் கரென்சியும்., ஒரு யூரோ சுமார் 74 ரூபாய்.

பொருளாதாரம்

பிரான்ஸ் ஒரு விசித்திர நாடு. உலகிலேயே அதிகக் கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு பிரான்ஸ்தான். மொத்தம் 26 லட்சம் கோடீஸ்வரர்கள். அதாவது, பிரெஞ்சுக்காரர்களில் சுமார் 26 இல் ஒருவர் கோடீஸ்வரர். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகம். கடந்த பல ஆண்டுகளாகப் பொருளாதாரம் சீராக இல்லை. விவசாயம், ரசாயனம், சுற்றுலா, அணுசக்தி மின்சார உற்பத்தி, தொலைத் தொடர்புக் கருவிகள் தயாரிப்பு ஆகிய முக்கிய தொழில் துறைகளில் மந்த நிலை. தொழிலாளர் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அடிக்கடி நடக்கின்றன. வேலைப்பற்றாக்குறையும் 10 சதவீதமாக இருக்கிறது.

பயணம்

ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள் வெயில் காலம். பெரும்பாலானோர் விடுமுறை எடுப்பார்கள். பிசினஸ் பயணங்களுக்கு இந்த இரு மாதங்களைத் தவிருங்கள்.

பிசினஸ் டிப்ஸ்

சந்திப்புகளுக்கு முன்னதாகவே நேரம், இடம் ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய் விடுங்கள். அவர்கள் ஓரளவு காலதாம தமாக வருவார்கள். அழுத்திக் கை குலுக்கக்கூடாது. சந்திப்பின்போது கட்டாயம் விசிட்டிங் கார்டுகள் தர வேண்டும். கல்விக்கும், பதவிக்கும் மதிப்புத் தரும் சமுதாயம் இது. ஆகவே, உங்கள் படிப்பு, பதவி விவரங்களை அவற்றில் கட்டாயம் குறிப்பிடுங்கள். ஒருபுறம் ஆங்கிலத்திலும், மறுபுறம் பிரெஞ்சிலும் விவரங்கள் இருப்பது நல்லது.

பேச்சு வார்த்தைகளுக்கு முன்னால், நலம் விசாரிப்பதும், தனிப்பட்ட விஷயங்கள் பற்றிப் பேசுவதும் நம் நாட்டு வழக்கம். பிரான்சில் இவை ஏற்றுக்கொள்ளப்படாதவை. பிரெஞ்சுக் காரர்கள் தங்கள் பண்பாடு, நாகரிகம் பற்றிப் பெருமை கொண்டவர்கள். அத்தகைய பாரம்பரியமும் அவர்களுக்கு உண்டு. இவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு போவது உறவுப் பாலம் அமைக்க உதவும்.

பேசும்போது அவர்கள் பார்வை கூரியதாக, உங்கள் கண்களை ஊன்றிக் கவனிப்பதாக இருக்கும். பழக்கமில்லாதவர்களை இந்தப் பார்வை ஓரளவு மிரட்டும். தைரியமாகப் பேசுங்கள். அடிப்படையில், பிரெஞ்சுக் காரர்கள் தோழமைக் குணம் கொண்ட வர்கள்.

அவர்கள் குரலை உயர்த்திப் பேசினாலும், கையை அதிகமாக ஆட்டி, உயர்த்திப் பேசினாலும், உணர்ச்சி வசப்பட்டாலும், மகிழ்ச்சி அடையுங்கள். உங்கள் பிசினஸில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று அர்த்தம். வாயில் பாக்கு, சூயிங்கம் ஆகியவற்றை மென்றுகொண்டு பேசாதீர்கள். இவற்றை அவமதிப்பாகக் கருதுவார்கள்.

தன்முனைப்பு அதிகமானவர்கள். தாங்கள் உயர்வானவர்கள் என்னும் தோரணை குரலில், உடல்மொழியில் இருக்கும். அடிமாட்டு பேரம் பேசுவார்கள். எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்னும் தெளிவோடு போகாவிட்டால், நஷ்டம் உங்களுக்குத்தான். ஒரே மீட்டிங்கில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. பிசினஸின் மதிப்புக்கேற்பப் பல பதவி மட்டங்களில் முடிவுகள் எடுக்கப்படும். ஆகவே, தாமதங்கள் சாதாரணம்.

தனித்துவ உடல்மொழிகள்

புல்லாங்குழல் வாசிப்பதுபோல் சைகை - யாரோ அளவுக்கு அதிக மாகப் பேசுகிறார்கள். விரல்களை உள்ளங்கையில் வைத்தல், தாடையைத் தடவுதல் பேச்சு போரடிக்கிறது.

உடைகள்

ஃபாஷன் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பிரான்ஸ்தான். ஆள் பாதி, ஆடை பாதி என்பதை நம்புபவர்கள். அவர்கள் ஏராளமான ஆடைகள் வைத்துக்கொள்வதில்லை. ஆனால், ஆண்களும், பெண்களும் கனகச்சிதமாக டிரெஸ் செய்து கொள்வார்கள். உங்களிடமும், இந்த உடை ரசனையை, ”பளிச்” தோற்றத்தை எதிர்பார்ப்பார்கள். வெயில் அதிகமாக இருந்தாலும் வேறு எந்தக் காரணமாக இருந்தாலும், கோட், டை ஆகியவற்றை நீங்கள் முதலில் கழற்றக்கூடாது. அவர்கள் கழற்றினால், அதற்குப் பிறகு நீங்கள் செய்யலாம்.

உபசரிப்புகள்

பிசினஸ் பேச்சுகள் நடத்த மதிய உணவு நேரம் சிறந்தது. இந்த விருந்துகள் ஒன்று, ஒன்றரை மணி நேரம் நீடிக்கும். விருந்தின்போது மது உண்டு. ஆனால், ஒயின் போன்ற வீரியம் குறைந்த பானங்கள் மட்டுமே அருந்தவேண்டும். விஸ்கி, ரம் போன்ற பானங்கள் கேட்பதும், அருந்துவதும் அநாகரிகம். இரவு விருந்துகளிலும் இப்படித்தான். விருந்துக்கு அழைத்தவர் நீங்கள் எங்கே உட்காரவேண்டும் என்று சொல்வார்.

அதற்குப் பிறகே, அந்த இருக்கையில் அமருங்கள். ரொட்டியைக் கையால் உடைத்துச் சாப்பிடவேண்டும். விருந்துகளில் பழங்கள் பரிமாறுவார்கள். இவற்றைக் கையால் உரிக்கவே கூடாது. கத்தி மட்டுமே பயன்படுத்தவேண்டும். பழக்க மில்லையா? பழங்களைத் தவிர்த்து விடுங்கள். யார் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார்களோ, அவர்தான் பில்லுக்குப் பணம் தரவேண்டும். எல்லா பிரபல உணவகங்களிலும், கூட்டம் அலைமோதும். முன்னரே ரிசர்வ் செய்யாவிட்டால், இடம் கிடைக்கவே கிடைக்காது.

ரிசுகள் தருதல்

விலை உயர்ந்த பரிசுகளைத் தவிருங்கள். இந்த அன்பளிப்புகள் லஞ்சமாகக் கருதப்படுகின்றன. உங்கள் நிறுவனத்தின் பெயரோ, லோகோவோ போட்ட பரிசுகள் தரவே கூடாது. புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், கலை யம்சப் பொருட்கள், பூங்கொத்துக்கள் ஆகிய பரிசுகளை விரும்புவார்கள், மதிப்பார்கள்.

slvmoorthy@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in