

கரோனா நாடு முழுவதும் பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் அன்றாடத் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் பலரும் மாற்றுத் தொழிலுக்கும் மாறியுள்ளனர். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் மென்பொருள் நிறுவனங்கள் இணையவழிச் சந்திப்புகளுக்கு தேவை அதிகமாக இருப்பதால் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன.
கரோனாவினால் வேலை இழப்பு ஒருபக்கம் இருந்தாலும், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் அவர்கள் செய்துவந்த வேலைகள் உள்ளூரைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்குக் கிடைத்துவந்தது. இதன் மூலம் பெரிய அளவில் கல்வித்திறன் இல்லாத பலருக்கு வேலை கிடைத்தது.
அதேபோல் கரோனாவின் தீவிரத்தால் கம்பெனிகள் தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் நேரடிக் கூட்டங்கள், வணிகக் கூட்டங்கள் ஆகியவை இப்போது முற்றாக ரத்தாகியுள்ளது. இதனால் அந்தக் கூட்டங்கள் நடத்திவந்த விடுதிகள் வருவாய் இழந்துள்ளன.
அதேநேரம், இப்போது இத்தகைய கூட்டங்கள் மெய்நிகர் நிகழ்வாக (virtual event) நடைபெற்று வருகிறது. மெய்நிகர் நிகழ்வுக்கான மென்பொருளைத் தயாரித்து, நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை முன்பெல்லாம் வெகுசில மென்பொருள் நிறுவனங்களே கையாண்டு வந்தன.
இந்த நிலையில் இப்போது மெய்நிகர் நிகழ்வுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதேபோல் இப்போது பள்ளிகள், இலக்கியக் கூட்டங்கள்கூட மெய்நிகர் சந்திப்புகளாக நடப்பதால் அது தொடர்பான மென்பொருட்களை உருவாக்கவும் ஒருங்கிணைப்பு செய்யவும் மென்பொருள் நிறுவனங்களில் அதிக அளவில் பொறியியல் படித்தவர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
பல பேரின் வாழ்க்கையையே முடக்கிப் போட்டிருக்கும் கரோனா இன்னொரு பக்கம் இப்படியொரு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறது.