

தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக் கெடு நீட்டிக் கப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சகம் உறுதிபடத் தெரி வித்துள்ளது.
முன்னதாக வரி தாக்கல் செய்வதற்கான காலம் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் அத்தகைய அறிக்கையை வருமான வரித்துறை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டதாக செப்டம்பர் 26-ம் தேதி வெளியான அறிக்கை போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி வருமான வரித்துறை சார்பில் வெளியான அறிக்கையில் துணைச் செயலர் உபமன்ய ரெட்டி கையெழுத்திட்டுள்ளார். இது போலியானது என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி யுள்ளது. மேலும் இதுபோன்ற போலியான அறிக்கையை வரி செலுத்துவோர் நம்ப வேண்டாம் என்றும் தணிக்கையாளர்கள் இந்த போலியான அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவை யில்லை என்றும் நிர்ணயிக் கப்பட்டபடி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்யு மாறு அறிவுறுத்தியுள்ளது.
பிரச்சினை ஏன்?
பொதுவாக ஆண்டுதோறும் மாதாந்திர சம்பளதாரர்கள், ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் தொழிலதிபர்கள், ரூ. 25 லட்சத்துக்கும் குறைவான வருமானம் ஈட்டும் தனி நபர்கள் ஆகியோர் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இது தணிக்கை செய்யப்படாத வரி தாக்கலாகும். இந்த ஆண்டு கூடுதலாக ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அது செப்டம்பர் 7-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அதேபோல ஆண்டு வருமானம் ரூ. 25 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்கள், ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் ஆகியோர் தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதியாகும்.
கடந்த ஆண்டு வரை இதுபோன்ற தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவன தணிக்கையாளர்கள் (ஆடிட்டர்கள்) அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அவர்கள் எல்லைக்குள்பட்ட வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து வந்தனர்.
இந்த ஆண்டு அனைத்துமே மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதுபோல தணிக்கை செய்யப்பட்ட நிறுவன கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேர் கடந்தமாதம் (ஆகஸ்ட்) 15 தேதிக்கு மேல்தான் வருமான வரி அமைச்சகம் அப்லோட் செய்தது.
இதனால் கூடுதல் அவகாசம் கேட்டு தணிக்கையாளர் சங்கம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கேட்டுக் கொண்டது. ஆனால் இந்த விஷயத்தை பரிசீலிப்பதாகக் கூறிய அவர், பிறகு அது தொடர்பாக திட்டவட்டமான பதிலை அளிக்கவில்லை.
வழக்குப் பதிவு
நாட்கள் நெருங்கியதால் மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில தணிக்கையாளர் சங்கம் வழக்கு பதிவு செய்தது.
சாஃப்ட்வேர் அப்லோட் செய்ததே கால தாமதம் என்பதால் அரசு கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டிலிருந்து ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தே சாஃப்ட்வேரை வருமான வரித்துறை அப்லோட் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் காலக்கெடு குறித்து எவ்வித தீர்ப்பையும் வழங்கவில்லை.
பிற மாநில உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்கு அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளது.
அபராதம்
வருமான வரித்துறை நிர்ணயித்த காலத்துக்குள் கணக்குகளை தாக்கல் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட தனி நபர் அல்லது நிறுவனத்தின் வருமானத்தில் 0.5% (அரை சதவீதம்) அல்லது ரூ. 1.5 லட்சம் இதில் எது அதிகமோ அத்தொகை அபராதமாக விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.
பாதிப்பு
நஷ்டத்தில் செயல்படும் நிறுவ னங்கள் குறித்த காலத்துக்குள் வரி தாக்கல் செய்யாவிடில், இந்த நஷ்ட விவரத்தை அடுத்த நிதி ஆண்டுக் கணக்குக்கு கொண்டு செல்ல முடியாது. இதனால் இதுபோன்ற நிறுவனங்கள் பாதிப் புக்குள்ளாகும் என தணிக்கை யாளர்கள் கூறுகின்றனர்.