பணவாட்ட சூழ்நிலைக்கேற்ப ஆர்பிஐ முடிவெடுக்க வேண்டும்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வலியுறுத்தல்

பணவாட்ட சூழ்நிலைக்கேற்ப ஆர்பிஐ முடிவெடுக்க வேண்டும்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வலியுறுத்தல்
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள பணவாட்ட சூழ்நிலை மற்றும் சர்வதேச பணவாட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் குறித்த முடிவினை ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லியில் நடந்த விழாவில் செய்தியாளர்களின் கேள் விக்கு பதில் அளிக்கும்போது இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது.

வரும் 29-ம் தேதி வட்டி விகிதம் குறித்த முடிவினை ரிசர்வ் வங்கி எடுக்க இருக்கிறது. அப்போது ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கி கவர்னர்) அனைத்து விதமான தகவல்களையும் ஆராய்ந்து முடிவெடுப்பார் என நம்புகிறேன்.

சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் தலைமை பொரு ளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூட பணவாட்ட சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

மெதுவான வளர்ச்சி, அதிக உற்பத்தி, மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு, அதிக பணியாளர்கள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பணவாட்ட சூழல் நிலவுகிறது. ஆனால் இந்தியா மற்ற நாடுகளுடன் வேறுபட்டு இருக்கிறது. இந்தியாவில் சிறிதளவு பணவீக்கம் இருக்கிறது. இந்தியாவில் வளர்ச்சி இருக்கிறது. இந்தியாவில் தேவை இருந்து வருகிறது.

முதல் காலாண்டில் 7 சதவீத வளர்ச்சி இருந்தாலும் நடப்பு நிதி ஆண்டில் எட்டு சதவீத வளர்ச்சி இருக்கும். இப்போதுதான் அரசாங்கம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறது. பருவமழை நன்றாக இருக்கும் பட்சத்தில் 8 சதவீத வளர்ச்சி என்பது சாத்தியம் ஆகும் என்றார்.

சர்வதேச முதலீட்டாளர் ஜிம்ரோஜர்ஸ் இந்தியாவில் இருந்து மொத்த முதலீட்டையும் வெளியே எடுத்தது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு, அவரின் கண்ணோட்டம் வேறு என்றார்.

அரசாங்க முதலீடுகள், மறைமுக வரி வருவாய், இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் என அனைத்து தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவருடைய கண்ணோட்டம் வேறுமாதிரி உள்ளது என்றார்.

நடப்பு ஆண்டில் இதுவரை 0.75 சதவீதம் வட்டி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலைமையில் வட்டி குறைப்பு தேவை என பல துறையினரும் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைத்தபடி இருக் கின்றனர்.

ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு

ரயில்வே துறையின் கட்டமைப்பை மேம்படுத்தவும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் ரயில்வே துறையில் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்.

ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் உதவிடவேண்டும். இதன் மூலம் இந்தியாவில் மறைமுக வரி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி ஏற்படும். இந்த மசோதா நிறைவேறாதது வேதனையை அளிக்கிறது. தொழில்புரிவதற்கு எளிதாக சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் எங்களுடைய பிரதான குறிக்கோள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in