Published : 11 Jun 2020 06:37 AM
Last Updated : 11 Jun 2020 06:37 AM

கரோனா ஊரடங்கு எதிரொலி: விமான நிறுவனங்களின் நஷ்டம் ரூ.6.32 லட்சம் கோடி

ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்துத் துறைக்கு இந்த ஆண்டு 8,430 கோடி டாலர் (சுமார் ரூ.6.32 லட்சம் கோடி) அளவுக்குநஷ்டம் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு நஷ்டத்தை இத்துறை எதிர்கொண்டது கிடையாது.

கனடாவைச் சேர்ந்த விமான தொழில் கூட்டமைப்பான ஐஏடிஏ இது தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது. நடப்பாண்டில் (2020) விமான நிறுவனங்களின் வருமானம் 50 சதவீத அளவுக்கு சரியும் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் விமான நிறுவனங்களின் வருமானம் 83,800 கோடி டாலராகும். இது தற்போது 41,900 கோடி டாலராக சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 2021-ம் ஆண்டில் இத்துறையின் நஷ்டம் 1,580 கோடி டாலராகக் குறையும் என்றும், வருமானம் 59,800 கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐஏடிஏ கூட்டமைப்பில் 300-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

தற்போது நாள் ஒன்றுக்கு இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டம் 23 கோடி டாலராகும் என்று கூட்டமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் டே ஜூனியாக் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காவிடினும் சில நாடுகள் விமானபோக்குவரத்தைத் தொடங்கிவிட்டன. எனினும் சர்வதேச அளவில்பயணங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

2021-ம் ஆண்டில் விமான நிறுவனங்களின் நஷ்டம் 10 ஆயிரம் கோடி டாலரை எட்டக் கூடும் என எச்சரித்துள்ளது. பயணிகளை ஈர்க்க கட்டண குறைப்பில் நிறுவனங்கள் ஈடுபட்டால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டில் 220 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு விமான பயணியால் ஏற்படும் 37.34 டாலர் அளவுக்கு நஷ்டத்தை விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் என்றார்.

விமான சேவைகளுக்கான தேவை அதிகம் இருப்பதால் கட்டண குறைப்பு செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் மொத்த செலவு 51,700 கோடி டாலராக இருக்கும் என்றும் இது2019-ம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட செலவை விட 35 சதவீதம் குறைவு என்றும் ஐஏடிஏ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் அல்லாத பிற செலவினங்கள் 14 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க விமான பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினால் அது செலவை அதிகரிக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைக்கு விமான எரிபொருள் விலை சற்று குறைவாக இருப்பது ஆறுதல் தரும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ளது. விமான எரிபொருள் ஒரு பீப்பாய் விலை தற்போது 36.8 டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு 77 டாலராக இருந்தது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் பயணிகளின் அடர்வு நடப்பாண்டில் 53 சதவீத அளவுக்குக் குறையும் எனமதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 2,900 கோடி அளவுக்கு இழப்புஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x