

பங்குச்சந்தையில் தொடர்ந்து 4-வது நாளாக வர்த்தகம் ஏறுமுகத்தில் இருக்கிறது.
இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 24,587.16 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90.10 புள்ளிகள் உயர்ந்து 7,353.65 என்ற நிலையில் இருந்தது.
மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற பிறகு, கடந்த 3 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 548 புள்ளிகள் அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குகளின் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாலும் பங்குச்சந்தையில் தொடர் ஏற்றம் இருப்பதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தவிர ஆசிய பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கெய், ஹாங்காங்கின் ஹாங்சென் பங்குகள் ஏற்றமும் எதிரொலித்துள்ளதாக தெரிவித்தனர்.
ரூபாய் மதிப்பும் உயர்வு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 5-வது நாளாக ஏற்றத்தில் இருக்கிறது. இன்று காலை, ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 58.54-ஆக இருந்தது.