Published : 09 Jun 2020 06:29 AM
Last Updated : 09 Jun 2020 06:29 AM

யெஸ் வங்கி அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: 5 காக்ஸ் அண்ட் கிங்ஸ் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை

மும்பை

யெஸ் வங்கியின் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, திவாலாகிப் போன சர்வதேச சுற்றுலா நிறுவனமான காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்தின் 5 வளாகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

அந்நியச் செலாவணி மோசடி தடைச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜய் அஜித் பீட்டர் கெர்கர் மற்றும் அவரது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்ட காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திவாலானதாகஅறிவித்தது. வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்கக் கூட முடியாத நிலையில் திவால் அறிவிப்பை அது வெளியிட்டது. இந்நிறுவனத்தில் நிறுவனர்கள் வசம் 12.20 சதவீத பங்குகள் உள்ளன. எஞ்சிய 87.80 சதவீத பங்குகள் பொதுமக்களிடம் உள்ளன.

சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டு நிறுவனமான காக்ஸ் அண்ட் கிங்ஸ் ரூ.5,500 கோடி அளவுக்கு நிலுவைத் தொகையை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டியுள்ளது. யெஸ் வங்கியில் அதிக அளவு கடன் பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். யெஸ் வங்கி தலைவராக ராணா கபூர் இருந்த போதுஇந்நிறுவனம் அதிக அளவில் கடன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யெஸ் வங்கிக்கு காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் ரூ.2,267 கோடி கடன் நிலுவை வைத்துள்ளது. கடந்த மாதம் இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தின் நிறுவனர் அஜய் அஜீத் பீட்டர் கெர்கரிடம் விசாரணை நடத்தினர்.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தற்போது சிறையில் உள்ளார். பல நிறுவனங்களுக்கு அதிகளவில் யெஸ் வங்கி மூலம் கடன் வழங்கி உள்ளார். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை திரும்பா கடனாக மாறி வங்கியை பெரும் நிதி நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

யெஸ் வங்கி தொடர்ந்து தவறான தணிக்கை அறிக்கையை வெளியிட்டு வருவதாக கடந்த ஏப்ரலில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 21 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி பரிவர்த்தனையை யெஸ் வங்கி மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டது.

இதேபோல காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனமும் தவறாக பலஆவணங்களை தயாரித்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு 160 வாடிக்கையாளர்கள் மூலம் பெற்றதாக ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) ஆய்வு செய்ததில் முறைகேடாக ஆவணங்களை தயாரித்திருந்ததை உறுதி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x