

வேகமான மாற்றத்தை முன்னெடுப்பதில் முக்கியமானவர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வதைக் காண முடிகிறது.
ஆண் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகப் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையும் உயரும்போது, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீதமும், ஜப்பானின் ஜிடிபி 9 சதவீதமும், இந்தியாவின் ஜிடிபி 27 சதவீதமும் உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மதிப்பிட்டிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, துருக்கியில் W-20 பெண்கள் மாநாட்டில் பேசிய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்டி இதைத் தெரிவித்திருக்கிறார்.
மாநாட்டில் மேலும் பேசியவர், "பெண்கள் முன்னேற்றம், உளரீதியிலான அடிப்படை மாற்றமாக மட்டுமே இல்லாமல், உறுதியான பொருளாதார மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்" என்றார்.
விவசாயத்திலும் பெண்களின் பங்கு
உணவு மற்றும் விவசாய அமைப்பைப் பற்றிப் பேசிய லெகார்டி, விவசாய வளங்களில் ஆண்களுக்கு ஈடாக பெண்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டால், விவசாய உற்பத்தியில் 4 சதவீத அதிக வளர்ச்சி கிடைக்கும். அதன் மூலம் 100 மில்லியன் மக்களின் பசியைப் போக்கமுடியும் என்றார்.
"வேகமான மாற்றத்தை முன்னெடுப்பதில் முக்கியமானவர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண முடிகிறது; சமூக மாற்றத்தை முன்னெடுப்பவர்களாலேயே, ஆண், பெண்ணின் வாழ்க்கையை மாற்றமுடியும்" என்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
உலகம், வாய்ப்புகளின் தருணங்களை உள்ளடக்கி இருக்கிறது. நாம்தான் அதனைச் சந்திக்க வேண்டும். அதை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.