

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைவராக ஜி.ஆர். சிந்தாலாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (27.05.2020) அவர் அந்தப் பொறுப்பினை மும்பையில் ஏற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக, அவர் “நாப்பின்ஸ்” என்ற நபார்டின் துணை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
டெல்லியின் புகழ்பெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுகலை பட்டதாரி சிந்தாலா. நாபர்டில் அதிகாரியாக சேர்ந்து, தலைமை அலுவலகம் (மும்பை) மற்றும் ஹைதராபாத். சண்டிகர், லக்னோ, புதுதில்லி, பெங்களூரு. அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றியவர். ஹைதராபாதில் உள்ள அக்ரி பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராவும், லக்னோவில் உள்ள வங்கியாளர்கள் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் (பி.ஐ.ஆர்.டி) இயக்குநராகவும் இருந்தார்.
சிந்தாலா 2006-ல் “பிராந்திய கிராமப்புற வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான செயல் திட்டம்” உள்ளிட்ட பலவேறு முக்கிய ஆலோசனை பணிகளை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளார். அதன் பயனாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வந்த 196 கிராமிய வங்கிகள் மாநில வாரியாக ஒருங்கிணைக்கப்பட்டன.
மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்காக “எஸ்.ஜி.எஸ்.ஒய்” திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் பெற்ற பயன்கள் குறித்த இவரது ஆய்வு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில்தான் தற்போதைய தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தை (என்.ஆர்.எல்.எம்.) தொடங்கப்பட்டது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அமெரிக்கா, சீனா, பொலிவியா, பிரேசில், கென்யா, செனகல், இந்தோனேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்று 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கருத்தரங்குகளில் பங்கேற்பதற்காக இவர் சென்றிருக்கிறார்.
சிந்தாலாவின் பல்லாண்டுகால ஆழமான மற்றும் கள அனுபவங்கள் நாட்டின் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு நிலவும் தற்போதைய சூழ்நிலையில், நபார்டின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.