பொருளாதாரத்தை சீர்படுத்த மாநில அரசுகளும்  20 லட்சம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்: நிதின் கட்கரி

பொருளாதாரத்தை சீர்படுத்த மாநில அரசுகளும்  20 லட்சம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்: நிதின் கட்கரி
Updated on
1 min read

நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படும் நிலை உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதற்காக மொத்தம் 20 லட்சம் கோடி ரூபாயில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவற்றின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது.

அதேபோல நாட்டின் ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதமாகும். அத்துடன் இத்துறையின் மூலம் 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக சிறு, குறு நடுத்தர தொழில்கள் உள்ளன.

மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையால் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, நொடித்து போன சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் உதவி அளிக்கும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சிறப்பு நிதியம் ரூ. 50 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் இத்துறைக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:

மார்ச் மாதத்தில் இருந்து சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடிக்கிடந்தன. அவற்றை சீர்படுத்த வேண்டும். சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.


இந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை 40 நாட்களுக்கு மேல் பிறகு செலுத்துவதற்கு வழிகளை செய்துள்ளோம். பெரும்பாலான தடைகளும் அகற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வேலையின்மை பிரச்சினை இருந்த நிலையில் 2 மாதங்களுக்கு மேலாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தையில் பணப்புழக்கம் இல்லை.

பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது. மத்திய அரசில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, மாநில அரசுகளில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, பொது மற்றும் தனியார் முதலீடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in