

மாகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மீது ரூ. 640 கோடி நஷ்ட ஈடு கோரி அரசு வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்துள்ளது. நுகர்வோர் அமைப்பான என்சிடிஆர்சி மூலம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையற்ற வர்த்தக நடைமுறை, தவறான லேபிள், திசைதிருப்பும் விளம்பரம் ஆகியவற்றின் மூலம் மாகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்பட்டதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (என்சிடிஆர்சி)-யிடம் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் பிரிவு 12 (1டி) படி என்சிடிஆர்சி--யிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ 640 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நுகர்வோருக்கு தேவை யற்ற வணிக நடைமுறையைப் பின்பற்றி மாகி நூடுல்ஸ் குறித்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததால் நஷ்ட ஈடு கோரப்பட் டுள்ளது. மாகி நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுட்டோ மைட் (எம்எஸ்ஜி) எனப்படும் ரசாயனப் பொருள் சேர்க்கப்பட்ட நிலையில் தனது விளம்பரத்தில் மாகி நூடுல்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானது என விளம்பரப்படுத்தியது தவறானது என புகாரில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக நுகர்வோரி டமிருந்து அதிக அளவில் புகார்கள் வரும்போதுதான் என்சிடிஆர்சி அமைப்பு முன்வந்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக பிரிவு 12 (1டி) கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் வழக்கு பதிவு செய்ய முடியும் என்பது புலனாகியுள்ளது.
இந்த சட்டப் பிரிவின்கீழ் என்சிடிஆர்சி அமைப்பில் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியும். கடந்த ஜூன் மாதம் உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான (எப்எஸ்எஸ்ஏஐ) நடத்திய ஆய்வில் மாகி நூடுல்ஸில் எம்எஸ்ஜி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இதற்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் லேபிளில் பொருள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். ஆனால் அதையும் நெஸ்லே பின்பற்றவில்லை என்று எப்எஸ்எஸ்ஏஐ குற்றம் சாட்டியது.