

பணவீக்கம் உள்ளிட்ட தகவல்களை பொறுத்தே வட்டி குறைப்பு முடிவினை எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் ஜாக்சன் ஹோல் பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போது இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: “வட்டிக் குறைப்பு உள்ளிட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் சேர்ந்து அமைக்கப்பட்ட குழு இணைந்து முடிவெடுக்கும். இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
சர்வதேச அளவில் பணவீக்க சூழ்நிலை பெரும்பாலான நாடுகளுக்கு இல்லை. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை வட்டிக் குறைப்பு செய்திருக்கிறோம். பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களைப் பொறுத்துதான் வட்டிக் குறைப்பு குறித்து முடிவெடுக்க முடியும். இனி வட்டி குறைப்பே செய்ய மாட்டோம் என்று உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. புள்ளிவிவரத் தகவல் அடிப்படையில் முடிவுகள் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கிக்கும் அமெரிக்க மத்திய வங்கிக்கும் (பெடரல் ரிசர்வ்) ஒரே விதமான பிரச்சினை இல்லை. இந்தியா பணவீக்கத்தை பற்றிக் கவலைப்படவில்லை. அமெரிக்காவை விட இரு மடங்கு வளர்ச்சியில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் வட்டி விகிதம் 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால் அமெரிக்கா தற்போது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்பது என் கருத்து.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு என்பது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, எப்போதாவது இருந்தே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வட்டி உயர்வு குறித்துமுடிவெடுக்க இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளலாம்.
சீனாவில் வந்திருக்கும் சரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வருவது குறித்து ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக ஜிஎஸ்டி இருக்கும்.
பங்குச்சந்தை குறித்து பேசிய போது, பெரும்பாலான பங்குச் சந்தைகள் சரிந்தாலும் சில முதலீட்டு வாய்ப்புகளில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை. அவை சரிய வாய்ப்பு உண்டு. அந்த சரிவு மெதுவாக ஏற்படலாம் அல்லது ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்றார்.