Last Updated : 22 May, 2020 08:51 PM

 

Published : 22 May 2020 08:51 PM
Last Updated : 22 May 2020 08:51 PM

இரண்டாவது முறையாக இஎம்ஐ ஒத்திவைப்பு; சலுகையைப் பயன்படுத்துவது நல்லதா?

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வீட்டுக் கடனுக்கான தவணையைச் (இஎம்ஐ) செலுத்துவது மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இந்த சலுகையைப் பயன்படுத்தாதவர்கள் இனி பயன்படுத்த முடியுமா என்பது குறித்து மூத்த வங்கியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலையடுத்து வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன்களுக்கான தவணைத் தொகை (இஎம்ஐ) செலுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்தது (moratorium) ரிசர்வ் வங்கி. இதன்படி மார்ச் 1 முதல் மே 31 வரை வங்கிகள் இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள் வழங்கின. இந்நிலையில் கரோனா தாக்கம் இன்னும் குறையாததாலும், ஊதிய வெட்டுகள், வேலையிழப்புகள் என மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீராததால், மேலும் 3 மாதங்களுக்குத் தவணைத் தொகை செலுத்துவதை நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்த ஒத்திவைப்பு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இஎம்ஐ செலுத்தாத காலகட்டத்தில் உள்ள வட்டித் தொகையை, அசலில் சேர்த்து வசூலிக்கும் முறையை வங்கிகள் பின்பற்றுவது விமர்சனத்துக்கு உள்ளானது. செய்த உதவிக்கு கைமாறாக வட்டிக்கு வட்டி போட்டு அந்தப் பணத்தை வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் இஎம்ஐ ஒத்திவைப்பை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஏற்கெனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள், இந்த முறை இதைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எஸ்.கோபாலகிருஷ்ணன்

இதுகுறித்து சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வுபெற்ற துணை பொது மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “தங்களால் இஎம்ஐ-யைச் செலுத்த முடியும் என்று ஏற்கெனவே இஎம்ஐ ஒத்திவைப்பைப் (moratoriyam) பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் செலுத்தப்படாத வட்டித் தொகை அசல் தொகையில் சேர்ந்துவிடும். அதாவது, நாம் புதிதாக ஒரு கடன் வாங்கியது போல அந்தத் தொகை அசலில் சேர்ந்துவிடும். அந்தத் தொகைக்கு வட்டிக்கு வட்டி என்று செலுத்த நேரிடும்.

உலகில் எளிய முறையில் உருவாக்கப்பட்டதுதான் தவணை முறை (இஎம்ஐ). இதற்கு வட்டி செலுத்த முடியாமல் போனால், கூடுதலாக வட்டி செலுத்த வேண்டும் என்பதை அறிந்துதான் இதுபோன்ற இஎம்ஐ தள்ளிவைப்பை மக்களும் பயன்படுத்துகிறார்கள். வங்கிகள் 10 பைசாவைக் கூட யாருக்கும் சும்மா கொடுக்கமாட்டார்கள். இஎம்ஐ பெறுவதற்கு எந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தினாலும் இன்றோ, நாளையோ அல்லது என்றோ அதற்கான வட்டியை வங்கிகள் வசூலித்துவிடும் என்பதை நிச்சயம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவில் 90 சதவீத மக்கள் தவணை தள்ளிவைப்பைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். ஏற்கெனவே தாக்குப் பிடித்தவர்களால் இப்போது தாக்குப்பிடிக்க முடியாமல் இருக்கலாம். ஏற்கெனவே 3 மாதங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போனவர்கள், இப்போது தாக்குப் பிடிக்கும் நிலைக்கு வந்திருக்கலாம். ஆனால், இந்தியச் சூழலில் இதுபோன்ற சலுகைகளைப் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளவே செய்கிறார்கள் என்பதுதான் கடந்த கால அனுபவம்.

எனவே இரண்டாம் கட்டமாக இஎம்ஐ தள்ளிவைப்பையும் 90 சதவீத அளவுக்குத் தவணை தள்ளிவைப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். ஒரு வேளை தங்களால் இஎம்ஐ-யைச் செலுத்த முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள் இஎம்ஐ-யைச் செலுத்துவதே நல்லது. தேவையில்லாமல் கூடுதலாக வங்கிக்குப் பணம் செலுத்தி நெருக்கடியைச் சந்திப்பதைவிட, செலுத்துவது நல்லது” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

ரிசர்வ் வங்கி தவணை தள்ளிவைப்பை நீட்டித்து மட்டுமல்ல, வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ ரேட்டையும் 4.40 சதவீதத்திலிருந்து 0.40 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், தற்போது ரெப்போ ரேட் 4 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுபற்றிக் கருத்து தெரிவித்த கோபாலகிருஷ்ணன், “பல ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ ரேட் 4 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. எனவே, வட்டி விகிதத்தில் 0.4 சதவீதப் புள்ளிகள் குறையும். இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான தவணையும் (இஎம்ஐ) குறையும். தனிநபர் கடனுக்கு முன்பு வட்டிக் குறைப்பு செய்தார்கள். ஆனால், இப்போது சில வங்கிகள் மட்டுமே வட்டிக் குறைப்பு செய்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கே வட்டி குறையும். ஏற்கனவே கடன் வாங்கியவர்களில் நிலையான (Fixed) வட்டி விகிதம் செலுத்துபவர்களுக்கு வட்டி விகிதம் மாறாது. மாறுபடும் (Variable) வட்டி விகிதம் செலுத்துபவர்களுக்கு வட்டி விகிதம் குறையும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x