

சில புத்தகங்கள் ரொம்ப நாட்களாக என்னுடன் பயணம் செய்யும். மணிரத்னம் படத்தில் ஒரு சீனுக்காக நடிக்கும் பெரிய நடிகர் போலவே, பரிதாபமாக மூன்று புத்தகங்களுடன் நான்காவதாகவே வரும். இந்த புத்தகம் வேறு ஒல்லியாக இருந்ததால் வசதியாக இலவச இணைப்பு போலவே மற்ற புத்தகங்களுடனேயே தூக்கி சென்று கொண்டிருந்தேன்.
விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை செல்ல ஏர் இண்டியா ஏறியிருந்தேன். மதிய நேர அசதியும், விருந்தோம்பல் செய்த பெண்மணிகளின் முறைப்பும், சக பயணியின் கைப்பிடி ஆக்கிரமிப்பும் ஏதாவது படித்தால் தேவலை என்று தோன்ற இந்த ஒல்லி புத்தகத்தை எடுத்தேன். மும்பை வருவதற்குள் முக்கால் வாசி முடித்திருந்தேன். சே, இதை ஏன் இத்தனை நாட்கள் படிக்கவில்லை?
The Inner Game of Tennis டென்னிஸ் கோச் ஆன W.Timithy Gallwey எழுதிய புத்தகம். 1974ல் எழுதிய புத்தகம். தன் பதினைந்தாம் வயதில் ஜெயிக்க வேண்டிய ஒரு சுலபமான மேட்ச் பாயிண்டை தவற விட்ட நாள் மனித மனதை படிக்க ஆரம்பித்தவர். பின் டென்னிஸ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தவுடன் இந்த உள் மனத் தடைகள் பற்றி நிறைய ஆராய்ந்தார். பின் அவர் எழுதிய கிளாசிக் இது. இன்றும் டென்னிஸ் மட்டுமில்லாமல் பல விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இது தான் புனித நூல் என்கிறார்கள்.
இதன் சாரத்தை வியாபார நிறுவனங் களும் மன அழுத்த மேலாண்மை, கவனக் குவிப்பு, விற்பனை, ஆரோக்கியம் என பல பயிற்சிகளில் பயன்படுத்துகிறார்கள். எனக்கு டென்னிஸ் பெரிய பழக்கமில்லை. ஆனால் படிக்க ஆரம்பித்தவுடன் களம் மிகவும் நெருக்கமாக தோன்றியது.
அதிகம் சுற்றாமல் விஷயத்திற்கு வருவது, தன் அனுபவத்தை கொண்டே எல்லா உதாரணங்களையும் தருவது, திட்டவட்டமான அத்தியாயப் பிரிவுகள் என அதிகம் வாசிப்பு இல்லாதவரையும் சிரமப்படுத்தாமல் கொண்டு செல்லும் நடை இவருடையது.
இதை பலர் கூற கேள்விப் பட்டிருக்கிறோம்: “எனக்கு தெரியாததை செய்ய முடியவில்லை என்றால் கூட தேவலாம். தெரிந்ததை கூட தேவையான நேரத்தில் செய்ய முடியவில்லை. அது தான் பெரிய குறை!”
இது தான் விளையாட்டு வீரர்களின் மிகப் பெரிய சவால்.
“பிராக்டிஸ் பண்ணும்போது பர்ஃபெக்டா விளையாடுவேன். ஆனால் மாட்சில் கேவலமா ஆடுவேன்!”
“விளையாடும்போது என் தப்பு என்னன்னு தெளிவா தெரியும். ஆனால் அந்த பழக்கத்தை மாற்ற முடியலை!”
“சொல்லிக் கொடுத்த மாதிரியே கரெக்டா ஆடணும் என நினைச்சா, விளையாடும்போது ஒண்ணு செஞ்சா ஒண்ணு மறந்துடறது!”
“விளையாட்டு ஆரம்பிக்கும்போது தான் திடீர்னு ரொம்ப நெர்வசா ஆகும். என் கவனம் முழுசா போய் சில்லி மிஸ்டேக்ஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன்!”
“எனக்கு எதிரியே நான் தான்!”
இவை புத்தகத்தில் உள்ளது மட்டுமல்ல..ஒவ்வொரு ஆட்டக்காரரும் சொல்ல நாம் கேட்டவை தான்.
விளையாட்டில் மட்டுமா? பரீட்சையில் திடீரென்று படித்ததெல்லாம் மறந்து விடுகிறது. துடைத்து விட்டது போல உள்ளது. இண்டர்வியுவில் தெரிந்த கேள்விக்கே குழப்பமாக பதில் அளிக்கிறோம்.
மேலதிகாரி சொல்லும் எளிய விஷயம் கூட பதற்றத்தில் புரிவதில்லை. சண்டையின்போது சொல்லக்கூடாது என்று வைத்திருக்கும் விஷயத்தை தெரிந்து எடுத்து உடைத்துவிட்டு பின்னர் வருந்துகிறோம்! இது எல்லோருக்கும் பொதுதானே?
பொதுவாக எல்லா விளை யாட்டையுமே உளவியல் விளையாட்டு என்பர். விளையாட்டு மட்டுமா? எல்லா மனித நடத்தையும் உளவியல் விளையாட்டுதான்.
இதை பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு, “அதனால் டென்ஷன் ஆகாதே. ரிலாக்ஸ்டாக இரு. தன்னம்பிக்கை முக்கியம். டெக்னிக்கை மறக்காதே” என்று கூறுவார்கள் பெரும்பான்மையான பயிற்சியாளர்கள். பிரச்சினை அதுவல்ல. இவையெல்லாம் “எப்படி” செய்வது? எப்படி டென்ஷன் ஆகாமல் இருப்பது? எப்படி ரிலாக்ஸ்டாக இருப்பது? எப்படி தன்னம்பிக்கை வரவழைப்பது?
இந்த புத்தகம் படித்தால் இந்த “எப்படி”கள் கண்டிப்பாக தெரிகிறது!
பொதுவாக பயிற்சியாளர்கள் சொல்வது, “மணிக்கட்டை இறுக்காதே. நேராகப் பார். பந்தை மட்டும் நினை. வேறு எங்கும் கவனம் வேண்டாம். ஸ்ட்ரோக் மறக்கக் கூடாது!” என்பது போலத் தான் இருக்கும்.
இவை அனைத்தும் நேர்மாறாக நடக்கும். ஆட்டக்காரர் தன்னை மிக மோசமாக திட்டிக்கொண்டு சரி செய்ய நினைக்க தவறுகள் அதிகரித்து ஆட்டம் கை நழுவிப் போகும்.
ஆசிரியர் அழகாகக் கூறுகிறார். விளையாட்டு நடப்பது வெளியே மட்டும் அல்ல. உள்ளும் ஒரு விளையாட்டு நடக்கிறது. கேள்வி கேட்பதும் விமர்சனம் செய்வதுமாக ஒரு மனமும், சொல்வதை கேட்டும் இயல்பாக விளையாட முனைவதுமாக ஒரு மனமும் இரு மனம் உள்ளன.
முதல் மனம் சொல்லும் விமர்சனங் களும் வசவுகளும் தீர்மானமான எண்ணங்களும் இரண்டாம் மனதில் பதிகிறது. இது தான் தன்னைப் பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கையையும் உருவாக்குகின்றன.
பயிற்சியாளர் வேலை இந்த இரு மனதையும் ஒருங்கிணைப்பது தான். திட்டு, பாராட்டு இரண்டும் வேண்டாம். திட்டு நேரிடையாக பாதிக்கிறது. பாராட்டு ஒரு நிபந்தனை நிலையை ஏற்படுத்தி ஆட்டக்காரருக்கு மட்டுமல்ல சக ஆட்டக்காரர் மன நிலையையும் பாதிக்கிறது.
இயல்பான நிலையில் மனம் அமைதி பெற்று குறிக்கோளை நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும் என்கிறார். சிறந்த இசையும் பாடலும் ஏன் மௌனத்தில் உருவாகிறது என்று புரிய வைக்கிறார். அது விளையாட்டிலும் சாத்தியம் என்று உணர வைக்கிறார், எளிய பாடங்களுடன்.
ஒரு ஜென் கதை படித்த நிறைவு இதை முடித்ததில் கிடைத்தது.
மனம் ஏகாந்தமாக செயல்படும்போது உன்னதங்கள் உருவாவதில் வியப்பில்லையே!
gemba.karthikeyan@gmail.com