Last Updated : 01 Aug, 2015 09:46 AM

 

Published : 01 Aug 2015 09:46 AM
Last Updated : 01 Aug 2015 09:46 AM

பொதுத்துறை வங்கிகளில் ரூ.12,010 கோடி முதலீடு: நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருப்பு- மக்களவையில் அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு ரூ. 12,010 கோடி முதலீடு செய்வது தொடர்பாக நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்படும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று மக்களவையில் அவர் கூறினார்.

மக்களவையில் கூடுதல் செலவினத்தை மேற்கொள்ள வசதியாக துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று பேசிய ஜேட்லி, தற்போது கூடுதலாக ரூ. 40,821.88 கோடி தேவைப்படுவதாக கூறினார். இதில் ரூ. 25,495 கோடி செலவுத் தொகையாகும். ரூ. 15,325 கோடி சேமிப்பு மூலமும் ஈடு செய்யப் படும்.

முத்ரா வங்கிக்கு ரூ. 100 கோடி மற்றும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 800 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், குடிநீர் மற்றும் சுகாதார திட்டப் பணிகளுக்கு ரூ. 2,685 கோடி ஒதுக்கி யுள்ளதாகவும், மின்சார நிதியத் துக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கியுள்ள தாகவும், பெட்ரோலியத் துறை உத்திசார் வள நிறுவனத்துக்கு ரூ. 1,153 கோடி ஒதுக்கியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளில் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதில் ரூ.12,010 கோடி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட்டில் ரூ.7,940 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் எஞ்சிய ரூ. 5 ஆயிரம் கோடி இரண்டாவது துணை மானிய கோரிக்கையில் ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்கிகளுக்கான நிதி ஒதுக்கீடு மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

16 நிறுவனங்கள் மீது விசாரணை

அரசின் அனுமதி இல்லாமல் பொதுமக்களிடம் சேமிப்புகள் திரட்டியதற்காக 16 நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ஜேட்லி கூறினார்.

2015-16-ம் நிதி ஆண்டில் இதுவரையில் சாராதா ஹவுசிங் நிறுவனம் உள்பட 16 நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர அம்புஜாட்ரிபுரி, ஆர்தா குழும நிறுவனங்கள், கிராண்ட் வியாபார் மற்றும் சஃபையர் இன்பிரா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

2012-13-ம் நிதி ஆண்டிலிருந்து 2015-16-ம் நிதி ஆண்டு வரையான மொத்தம் 145 நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் கூறினார்.

விசாரணை நடத்த உத்தரவிடப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான வழக்குகள் முடிவடைந்துவிட்டன. திவாலான மற்றும் மூடிய நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் திரட்டிய நிதியை திரும்ப அளிக்கும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் வரி வருமானம் ரூ. 75,441 கோடி

பெட்ரோல், டீசல் மீதான வரி மூலமான வருமானம் 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ. 75,441 கோடியாக உயர்ந்ததாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மக்களவையில் தெரிவித்தார். முந்தைய நிதி ஆண்டில் வசூலானதை விட 60 சதவீதம் அதிகமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x