Published : 17 May 2020 10:26 AM
Last Updated : 17 May 2020 10:26 AM

வட்டி மானியம் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

திருப்பூர்

திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்நியச் செலாவணி அதிகளவு ஈட்டப்படுகிறது. இதனால் தொழில்துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில சலுகைகளை வழங்கி வருகிறது. திருப்பூரில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வட்டி மானியமும், ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீதமும் வட்டி மானியம் மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் வட்டி மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

ஏ.இ.பி.சி எனப்படும் ( Apparel Export Promotion Council) ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் அகில இந்திய தலைவர் சக்திவேலுக்கு, இது தொடர்பாக பின்னலாடைத் தொழில்துறையினர் தெரிவித்தனர். ஏ.இ.பி.சி. சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தற்போது வட்டி மானியம் வழங்கும் காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: வட்டி மானியத்தின் மூலம் கிடைக்கும் பணம் தொழில்துறையினருக்கு சிறிது செலவை குறைக்க உதவும். நிதி பற்றாக்குறையை களையும். தற்போது கரோனா பாதிப்பு உள்ள சூழலில் இந்த தொகை பின்னாலாடை உற்பத்திக்கு பக்கபலமாக இருக்கும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x