Published : 16 May 2020 08:41 PM
Last Updated : 16 May 2020 08:41 PM

400 மில்லியன் டாலர் கொடுத்து ஜிஃபி நிறுவனத்தை வாங்குகிறது ஃபேஸ்புக்

ஜிஃபி (GIPHY) நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஃபேஸ்புக் இதற்காக செலவிடவுள்ளதாகத் தெரிகிறது.

அனிமேட் ஆகும் புகைப்படங்கள் ஜிஃப் (GIF) எனப்படும். சமூக ஊடகங்களில் கருத்துகளுக்குப் பதில் கருத்தாகவோ, அல்லது தனி கருத்தாகவோ ஒரு ஜிஃப் படத்தைப் பகிர்வது வழக்கமாக இருந்து வருகிறது. இணையத்தில் வடிவேலு, கவுண்டமணி என நம்மூர் நடிகர்களின் நகைச்சுவையான முகபாவனைகள் வரை ஜிஃப் படமாகக் கிடைக்கிறது. இதை உருவாக்குவதற்கென்றே பெரும் கூட்டம் ஒன்றும் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது.

கணினியின் ஆரம்பக் காலங்களிலிருந்தே ஜிஃப் படங்கள் புழக்கத்தில் இருந்தாலும் சமூக ஊடகங்களின் வரவு அதை இன்னும் பிரபலமாக்கிப் பரவலாக்கியது. கடந்த 2013ஆம் ஆண்டு, இப்படியா ஜிஃப் படங்களைத் தேடுவதற்கான ஒரு தேடியிந்திரமாக ஜிஃபி இணையதளம் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பயனர்கள் கருத்துப் பதிவிடும்போது ஜிஃப் படங்களை சேர்க்க ஜிஃபியின் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கும் படங்களைப் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமிலும் இதே வசதி இருக்கிறது.

தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் ஜிஃபியை வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஃபி எப்படிச் செயல்பட்டு வந்ததோ அது அப்படியே தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஃபேஸ்புக் தொடர்பான மற்ற செயலிகளிலும் ஜிஃபி வசதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, பயனர்கள் எப்போதும் போல தாங்கள் உருவாக்கிய ஜிஃப் படங்களை ஜிஃபி தளத்தில் பதிவேற்றலாம்.

மேற்கொண்டு ஜிஃபியின் கூடுதல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைச் செய்யவுள்ளதாகவும், செயலாக்க அளவில் சில மாற்றங்களைச் செய்யப் போவதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஜிஃபி தளத்துக்கு வரும் பயனர்களில் 50 சதவீதம் பேர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெஸஞ்சர், வாட்ஸப் உள்ளிட்ட பேஸ்புக்கின் மற்ற செயலிகள் மூலமாகத்தான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x