

ஃபேஸ்புக் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் தலைவர் ஜெரோம் பெஸண்டி, செயற்கை நுண்ணறிவு பற்றி டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் பேசியதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி மஸ்க்குக்கு எதுவுமே தெரியவில்லை என்று பெஸண்டி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் பயப்பட வேண்டும். அது மனித இனத்தையே ஆளும் சாகாவரம் பெற்ற சக்தியாக இருக்கும். மனிதர்களால் தப்பிக்கவே முடியாது என்று ஒரு ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தனது ஒரு ட்வீட்டில் கூட வடகொரியாவைப் பார்த்துப் பயப்படுவதை விட செயற்கை நுண்ணறிவைப் பார்த்தே நாம் பயப்பட வேண்டும் என்கிற ரீதியில் கருத்துப் பகிர்ந்திருந்தார்.
தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஜெரோம் பெஸண்டி, "நான் இதைச் சொல்வதை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் பலர் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசும்போது அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் சொல்வதுபோல பொதுவான செயற்கை நுண்ணறிவு என்று ஒன்று கிடையாது. மனித அறிவுக்கு நிகராக செயற்கை நுண்ணறிவை மாற்றவே முடியாது.
அவர் சொல்லும் அந்தப் பொதுவான அறிவு பற்றிய கருத்து அர்த்தமற்றது. அதைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள். செயற்கை நுண்ணறிவில் சில இடர்கள் உள்ளன. ஆனால் அவர் இயந்திரங்கள் நம்மை ஆளும் என தவறான விஷயங்களைப் பேசி உண்மையான பிரச்சினைகளிலிருந்து நம்மைத் திசை திருப்புகிறார். இது பற்றிய ஒரு கருத்தரங்கே இணையத்தில் உள்ளது. ஆனால் இவர்கள் கூறிவரும் தவறான கருத்துகள் அந்தக் கருத்தரங்கு பற்றிய விழிப்புணர்வைத் தடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் பலர் எலான் மஸ்க் எதிர்மறையாக கவனச் சிதறலை ஏற்படுத்துபவர் என்றே நினைக்கிறோம். அவரிடம் யாரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மார்க் ஸக்கர்பெர்க்குக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிச் சரியாகத் தெரியவில்லை என சில மாதங்களுக்கு முன்பு மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் தெரிவித்திருந்த ஸக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் உலகமே அழியும் என்று ஊகிப்பவர்களின் கருத்து பொறுப்பற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.