

கரோனா நெருக்கடி முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் கூட, ட்விட்டர் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா நெருக்கடி ஆரம்பித்ததும் தனது ஊழியர்கள் 5,000 பேரை வீட்டிலிருந்தே வேலையைத் தொடரும்படி கூறிய முதல் தொழில்நுட்ப நிறுவனம் ட்விட்டர்தான். தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி செவ்வாய்க்கிழமை அன்று தனது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இனி நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யும் தேர்வைத் தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இடப் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் ஆட்களைத் தவிர யாருக்கெல்லாம் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியுமோ அவர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செப்டம்பர் வரை ட்விட்டர் நிறுவனம் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றும் டார்ஸி கூறியுள்ளார்.
முன்னதாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆல்ஃபாபெட் நிறுவனங்கள், இந்த வருடம் முடியும் வரை தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் அலுவலகக் கட்டிடம் ஜூலை 6 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிகிறது. கூகுள் அலுவலகமும் ஜூலை மாதத்திலிருந்து இயங்கும். வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த வருடம் முடியும் வரை அதைத் தொடரலாம். ஆனால் இதற்கு முன் ஜூன் 1-ம் தேதி வரை மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும் என்று கூகுள் கூறியிருந்தது.
மற்றொரு பெரிய நிறுவனமான அமேசான், இந்தியாவில் தனது ஊழியர்கள் அக்டோபர் மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அறிவித்துள்ளது.