

கரோனா மீட்பு பொருளாதார நடவடிக்கைகளுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், பழைய பொருளை புதிய பெயரில் விற்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தளர்த்தும் முடிவு குறித்து வெவ்வேறு கருத்துக்களை மாநில அரசுகள் முன் வைத்தன. சில மாநில அரசுகள் ஊரடங்கு தொடர வேண்டும் எனவும், சில தளர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில் ‘‘ கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும். பொருளாதார மீட்பு பணியில் உள்கட்டமைப்பு பணிகள் மிக முக்கியம். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கவதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்.’’ எனக் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியதாவது:
‘‘20 லட்சம் கோடி ரூபாயில் உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கவும் சுயசார்புடனும் திகழ திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஏற்கெனவே இந்தியாவில் தயாரிப்போம் என்ற பாஜகவின் பழைய திட்டத்தை தான் புதிய பெயர் வைத்து அழைக்கிறார்கள்.
இப்படி பெயர் வைப்பதால் எந்த பயனும் இல்லை. பழைய பொருளை புதிய பெயரில் விற்பதால் எந்த பயனும் இல்லை. வெறும் கனவுகளை மட்டும் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்ய முடியாது’’ எனக் கூறினார்.