ஊரடங்கு விதியை மீறி தொழிற்சாலையைத் திறந்த எலான் மஸ்க்: வந்து கைது செய்து கொள்ளுங்கள் என அறிவிப்பு

ஊரடங்கு விதியை மீறி தொழிற்சாலையைத் திறந்த எலான் மஸ்க்: வந்து கைது செய்து கொள்ளுங்கள் என அறிவிப்பு
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவை மீறி தொழிலதிபர் எலான் மஸ்க், ப்ரேமோண்ட் நகரில் இருக்கும் தனது டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள மஸ்க், "அலமேடா மாகாணத்தின் விதிகளை மீறி டெஸ்லா இன்று மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்கிறது. அங்கு மற்றவர்களுடன் நானும் இருப்பேன். யாரை வேண்டுமானாலும் கைது செய்ய வேண்டுமென்றால் என்னை மட்டும் கைது செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அலமேடா மாகாண அரசு அதிகாரிகளும், ப்ரேமோண்ட் நகரக் காவல்துறையும் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த வாரம் மாகாணத்தின் விதிகளுக்கு எதிராக மஸ்க் வழக்குத் தொடர்ந்திருந்தார். தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி எப்படித் தொடங்கும், ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட விவரங்களையும் மஸ்க் சமர்ப்பித்திருக்கிறார்.

மேலும், தனது தொழிற்சாலை திறக்க அனுமதிக்கப்படவில்லை என்றால் நெவடா அல்லது டெக்சாஸுக்கு தனது தொழிற்சாலையை மாற்றிவிடுவேன் என்றும் மஸ்க் கூறியிருந்தார். தற்போது டெஸ்லா தொழிற்சாலையில் 30 சதவீதப் பணியாளர்களுடன் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளுநர் கெவின் நியூஸம் அனுமதித்துள்ளதாக மஸ்க் கூறியுள்ளார். திங்கட்கிழமை அன்று ஆளுநர் கெவின் நியூஸம், டெஸ்லாவுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தங்கள் அறிவுறுத்தலின் பேரில் டெஸ்லா ஒழுங்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் ஒரு பாதுகாப்புத் திட்டத்தை இருதரப்பும் சேர்ந்து முடிவு செய்யவுள்ளதாகவும் அலமேடா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in