

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் வேலை, ஒரு ட்வீட்டால் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கத் தொழிலதிபரும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையான கருத்துகளுக்குப் பிரபலமானவர். இவர் கூறும் கருத்துகள் அவ்வப்போது செய்தியாவது உண்டு. சில நேரங்களில் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கே பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியதுண்டு.
அப்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று, "என் பார்வையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன" என்று ட்வீட் செய்தார் மஸ்க். இந்த ட்வீட்டைப் பதிவேற்றும் வாரை 141 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த டெஸ்லாவின் சந்தை மதிப்பு, இந்த ட்வீட்டுக்குப் பின் 127 பில்லியன் அமெரிக்க டாலர் என அதிரடியாகக் குறைந்தது. ஒரு ட்வீட்டின் மூலம் கிட்டத்தட்ட 14 மில்லியன் டாலர்களைக் குறைத்துவிட்டார் மஸ்க்.
இதுகுறித்து ஒரு பயனர், "உங்களுக்குப் பணம் வேண்டும் என்பதால் இதைச் சொல்கிறீர்களா அல்லது உலகம் எரிந்து கொண்டிருப்பதற்கான எதிர்ப்பா?" என்று கேள்வி கேட்க, அதற்குப் பதில் கூறிய மஸ்க், "எனக்கு பணம் வேண்டாம். என்னை பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அர்ப்பணிக்கிறேன். எதையும் சொந்தம் கொண்டாடுவது நமக்கு பாரமே" என்று குறிப்பிட்டார்.
டெஸ்லா நிறுவனம் தொடர்பாக மஸ்க் எந்த விஷயத்தை வெளியில் பகிர வேண்டுமென்றாலும் அதற்கு அவர் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. எனவே சமீபத்திய சர்ச்சை ட்வீட்டினால் மஸ்க்கின் வேலையே பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆகஸ்ட் 2018-ல், மஸ்க் பதிவேற்றிய ஒரு ட்வீட்டினால் அவருக்கு டெஸ்லா குழுமத்தின் தலைவர் பதவி பறிபோனது நினைவுகூரத்தக்கது.