

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலிலிருந்தாலும், இந்திய ஊரடங்கு தான் தங்களின் வருவாயை அதிகம் பாதித்துள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24 முதல் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இப்போதைக்கு மே 3-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு தொடரவுள்ளது. இந்த நேரத்தில் அமேசான் உள்ளிட்ட ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு, மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்கவும், வாடிக்கையாளருக்குக் கொண்டு சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி பேசியுள்ள அமேசான் நிறுவனம், "சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் இந்தியாவில் தான் என நினைக்கிறோம். அங்கிருக்கும் மற்ற நிறுவனங்களைப் போல நாங்களும் இப்போது மளிகைப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் மட்டுமே விற்கிறோம்.
இதன் மூலம் எங்கள் மற்ற பல பொருட்களின் விற்பனை தடைப்பட்டுள்ளது. மீண்டும் நாங்கள் இயங்க இந்திய அரசு அனுமதிக்கும் போது எங்கள் பணியை விரிவாக்குவோம். எனவே இந்தியாவில் மளிகைப் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களின் விற்பனை இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
கடந்த மாதம் அமேசானின் செய்தித் தொடர்பாளர், தங்கள் நிறுவனம் குடிமக்களைப் பாதுகாப்பாக வைப்பதில் முனைப்புடன் இருப்பதாகவும், இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இகாமர்ஸ் தளங்களும் தங்கள் பங்கை ஆற்ற, மக்களின் நீண்ட காலத் தேவைக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் விற்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழிலாளர்கள், அமேசான் பொருட்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் பணியாளர்கள் என இரு தரப்புக்கும் ஏற்கெனவே நிவாரண உதவியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.