

ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் பங்குகளை உயர்த்தும் திட்டத்தில் டாடா குழுமம் இருக்கிறது. தற்போது ஏர் ஏசியா நிறுவனத்தில் 30 சதவீதம் அளவுக்கு டாடா குழுமத்தின் பங்கு இருக்கிறது. இதனை 41 சதவீதம் வரை உயர்த்த டாடா குழுமம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
ஏர் ஏசியா நிறுவனத்தின் இன்னொரு முதலீட்டாளரான டெலஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்தின் அருண் பாட்டியா 21 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இவரிடமிருந்து கணிசமான பங்குகளை வாங்க டாடா சன்ஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் இது குறித்த மற்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இது தவிர ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் முதல் முறையாக மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிகிறது. நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான மித்து சாண்டில்யா நிர்வாக இயக்குநராக பதவி உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விஜய் கோபாலன் ராஜிநாமா செய்துவிட்டார். இவர் தனிப்பட்ட காரணங்களுக்கான ராஜிநாமா செய்திருக்கிறார். எங்களுடைய இயக்குநர் குழு புதிய தலைமை நிதி அதிகாரியை தேடும் பணியை தொடங்கி இருக்கிறது என்று ஏர் ஏசியா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ரூ.74 கோடி நஷ்டம்
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 19 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்திருக்கிறது. அந்த காலாண்டில் 74 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. இந்த காலாண்டில் 2.38 லட்சம் பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு பயணி மூலம் 3,131 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.
மே ஜூன் மாதத்தில் நிறுவனம் லாப பாதைக்கு திரும்பும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கடந்த பிப்ரவரி மாதத்தில் தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 7 முதல் 10 ஆக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது.